Jul 13, 2025 - 05:32 PM -
0
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், நாராயண பேட்டை மாவட்டத்தில் செல்பி எடுக்கலாம் வா என்று அழைத்து சென்று கொலை செய்யும் நோக்கத்தில் கிருஷ்ணா ஆற்றில் தள்ளிவிட்டதாக, மனைவி மீது கணவர் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாத்தப்பா. அவர் தனது மனைவியுடன் தெலங்கானா மாநிலம் கடலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
சம்பவத்தன்று, அக்கிராமத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றினை வேடிக்கை பார்க்க கணவன் மனைவி இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். கிருஷ்ணா ஆற்றின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆற்றின் அழகைக் கண்டு தாத்தப்பாவின் மனைவி செல்பி எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
உடனே பைக்கை நிறுத்திய தாத்தாப்பா, மனைவியை பாலத்தின் ஓரமாக நிற்கச் சொல்லி, நீரோட்டத்தை போக்கஸ் செய்து பாலத்தின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென்று பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர், நீரோட்டத்தில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார்.
இதில் அதிர்ஷ்டவசமாக நதியின் நடுவே இருந்த பாறையின் மீது ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொண்ட தாத்தப்பா, காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று சத்தம் போட்டுள்ளார்.
அதை கவனித்த உள்ளூர் இளைஞர்கள் கயிறு ஒன்றுடன் ஓடி வந்து அந்த கயிற்றை நதியில் சிக்கிக் கொண்டிருந்த நபரை நோக்கி வீசி அவரை காப்பாற்றிக் கரை சேர்த்தனர். அப்போது மேலே வந்தவர், திடீரென்று ஆவேசமடைந்தார். பாலத்தின் சுவர் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயன்றபோது, தன்னை கொலை செய்யும் நோக்கில் மனைவிதான், தன்னை ஆற்றில் தள்ளி விட்டதாகக் கூறி அதிர கொடுத்துள்ளார்.
ஆனால் தான் அப்படி செய்யவில்லை என்றும், இது தவறுதலாக நடந்த விபத்து என்றும் கூறி மனைவி கதறலுடன் விளக்கம் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து தாத்தப்பாவை மீட்ட உள்ளூர் இளைஞர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். ஒரு கட்டத்தில் இருவரின் குடும்பத்தினருக்கும், தகவல் கொடுத்து அவர்கள் வந்த பின்னர் கணவன் - மனைவி இருவரையும் அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், தாத்தப்பாவை அவரது மனைவிதான் உண்மையிலேயே ஆற்றில் தள்ளி விட்டாரா?. இல்லை தவறுதலான விபத்தை, தாத்தப்பா தவறாக எடுத்துக்கொண்டார்? என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
செல்பி எடுக்கலாம் வா! என்று அழைத்து சென்று கொலை செய்யும் நோக்கில் கிருஷ்ணா ஆற்றில் தள்ளிவிட்டதாகக் கூறி, மனைவி மீது கணவர் பகீர் குற்றச்சாட்டு வைத்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.