Jul 22, 2025 - 12:31 PM -
0
வெறும் வயிற்றில் சில விஷயங்களை செய்வது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் கிடையாது.
காலையில் நம் உடலில் உயிர்காக்கும் ஹார்மோனான கார்டிசோல் அளவுகள் அதிகமாக இருக்கும்.
இது அவசரகாலங்களில் நமக்கு உதவக் கூடியது. ஆனால் இது அதிகம் சுரப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல. சில விஷயங்களை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் செய்வதால் கார்டிசோல் சுரப்பு அதிகமாகும். மன அழுத்தம் ஏற்படும்.
உதாரணமாக, காலை எழுந்ததும் டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது, ஏதேனும் விஷயங்களை நினைத்து வருத்தப்படுவது, அதிகமாக சிந்திப்பது தவிர்க்க வேண்டிய விஷயங்களாகும். நீங்கள் பதட்டத்துடன் ஒரு நாளை தொடங்கினால் அது இன்னும் அதிகமாக கூடும். இதனால் கார்டிசோல் அதிகம் சுரக்கலாம். இதன் காரணமாக வெறும் வயிற்றில் குமட்டல், தலை சுற்றல், எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடிப்பது புத்துணர்வாக தோன்றினாலும், இது வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் வயிற்றுப் புறணி எரிச்சல் அடையும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெறும் வயிற்றில் மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் தவறான செயலாகும். அதிலும் வலி நிவாரணிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆஸ்பிரின், பாரசிட்டாமல் உள்ளிட்ட எந்த மருந்துகளையும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது வயிற்றில் உட்புறம் எரிச்சலையும், இரைப்பை புண்களையும், இரத்தப் போக்கையும் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
எலுமிச்சை தண்ணீர் சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும். ஆனாலும் இதில் இருக்கும் அமிலத்தன்மை காரணமாக வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். தினசரி எலுமிச்சை தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வருபவர்களுக்கு வயிற்றில் பிரச்சனை வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மதுவுக்கு அடிமையான சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே மது அருந்துவார்கள் இது இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கும் ஆனால் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது உடலுக்கு நல்லதல்ல நாளடைவில் கல்லீரலில் மோசமான பாதிப்பு ஏற்படலாம்.
பச்சை பயிர்கள், முளைகட்டிய தானியங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனாலும் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை முறையாக உட்கிரத்து அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச கொழுப்பும், கார்போஹைட்ரேட்டுகளும் இணைத்து சாப்பிட வேண்டியது அவசியம். அதனால் முளைகட்டிய தானியங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது.