பல்சுவை
8 மாத கர்ப்பிணி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

Jul 23, 2025 - 02:05 PM -

0

8 மாத கர்ப்பிணி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை

இந்தியாவின் திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சுரேந்திரன் (வயது 28). இவருக்கும் சோழிங்கநல்லூரில் வசித்து வரும் உறவினர் மகளான பிரியங்காவுக்கும் (25) இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

 

சுரேந்திரனின் தாயும், பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். எனவே சுரேந்திரன் - பிரியங்கா நட்பாக பழகி வந்ததை குடும்பத்தினர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

இதற்கிடையே அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

 

இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி அறிவுரை வழங்கினர். ஆனால் காதலர்கள் இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி வந்தனர். 


இதற்கிடையே பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். இதனை கூறி அவர்கள் திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் காதலர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று (22) இரவு தண்டலம் பகுதியில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

 

நீண்டநேரம் ஆகியும் வெளியே சென்ற சுரேந்திரன் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தேடி சென்றபோது பம்பு செட் அறையில் சுரேந்திரனும், பிரியங்காவும் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்போரூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் பொலிஸார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்போரூர் பொரலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05