Jul 29, 2025 - 10:44 AM -
0
'I Love You' என்று சொல்வது மட்டும் பாலியல் தொல்லை ஆகாது, தெளிவான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால் அது பாலியல் சீண்டலாகக் கருதப்படாது என்று இந்தியாவின் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் 'I Love You' என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்தது.
இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதி சஞ்சய் எஸ் அகர்வால், 'I Love You' என்று ஒருமுறை மட்டும் சொல்வது, தொடர்ந்து அல்லது பாலியல் ரீதியாகத் தூண்டும் நடத்தை இல்லாமல், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் பாலியல் தொல்லைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யாது என்று தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரல் ஃபார் இந்தியா வெர்சஸ் சதீஷ் (2021) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, பாலியல் ரீதியான சைகை பாலியல் தொல்லையின் வரம்பிற்குள் வர வேண்டுமானால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, இளைஞரின் விடுதலையை நீதிபதி உறுதி செய்தார்.

