Aug 2, 2025 - 12:59 PM -
0
இந்தியாவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு மட்டும் சுமார் ஒரு இலட்சம் பேர் சாமி தரிசனம் செய்து வருவதாக திருப்பதி ஆலயத்தின் நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பதாக கூறப்படுகின்றது.
திருப்பதி என்றதும் ஏழுமலையான் நினைவோடு அங்கு பிரசாதமாக 'லட்டு' வழங்கப்படுவதை தவிர்க்க முடியாது.
திருப்பதி போயிட்டு வந்தேன்' என்று யாரிடம் சொன்னாலும் 'லட்டு எங்கே' என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும்.
அந்தளவுக்கு திருப்பதி லட்டு என்றால் உலக அளவில் பிரபலம். லட்டின் தனித்துவ சுவைக்கு அடிமையாகாதோரே இல்லை என்றே சொல்லலாம்.
அதுவும் தரிசனத்திற்கு சென்று திரும்புவர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
அந்த காலத்தில் போக்குவரத்து சரியாக இல்லாமல் இருந்ததால் ஏழுமலையை கடந்து வந்து, பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, வீடு திரும்ப பல நாட்கள் ஆகும்.
அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக, எளிதில் கெட்டு போகாமல் இருப்பதற்காக லட்டுக்களை பிரசாதமாக தயாரித்து கொடுக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடைமுறை கடந்த 1715ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
310 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனியே ஒரு துறை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த லட்டு பிரசாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொட்டு என்னும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

