Aug 4, 2025 - 10:57 AM -
0
இந்தியாவின் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ரோகிணி (வயது 30) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ரோகிணி, இரண்டரை வயது குழந்தையை உறவினர்களிடம் விட்டுவிட்டு, ராஜேஷின் தந்தையைப் பார்க்க சென்னைக்கு திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்தனர்.
ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரோகிணி கழிவறைக்குச் சென்று முகம் கழுவச் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், ரயிலில் கழிவறை கதவை திறந்து பார்த்த போது அங்கே அவர் இல்லை.
அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே பொலிஸார் ரோகிணியை தேடியபோது, வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதி தண்டவாளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆடைகள் மற்றும் அடையாளங்கள் மூலம் உடல் ரோகிணியுடையது என உறுதிப்படுத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், ரயிலில் இருந்து தவறி விழுந்ததால் ரோகிணி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சில சாட்சிகளின் கூற்றுப்படி, பலத்த காயங்களுடன் எழுந்து நடக்க முயன்ற ரோகிணிக்கு உதவி கிடைக்காததால், தண்டவாளத்தில் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜோலார்பேட்டை ரயில்வே பொலிஸார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.