Aug 6, 2025 - 09:29 PM -
0
மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கு கோப்பிலிருந்து பக்கங்களை சட்டவிரோதமாக கிழித்து எறிந்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணி டபிள்யூ.டி. தர்மசிறி கருணாரத்னவை உயர் நீதிமன்றம் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோரின் ஒப்புதலுடன் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த தீர்ப்பை அறிவித்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு சென்று, ஒரு வழக்குக் கோப்பைப் பெற்று, அதிலிருந்து இரண்டு பக்கங்களை சட்டவிரோதமாக கிழித்ததாகக் பிரதிவாதியான சட்டத்தரணி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளர் டபிள்யூ.எஸ்.பி.எஸ். பெர்னாண்டோ, இது குறித்து மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 2023 ஜனவரி 25ஆம் திகதியன்று தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நீதித்துறை பட்டியலில் இருந்து பெயரை நீக்காமல் இருப்பதற்கான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 42(3) இன் கீழ் குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டது. மேலும் அவர் நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டில் தான் ஒரு நிரபராதி என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு சாட்சி விசாரணை நடைபெற்றது, இதன் போது பிரதிவாதியின் சட்டத்தரணியும் சாட்சியமளித்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 40 இன் படி, நல்ல நற்பெயர் பெற்ற, திறமையான அறிவு மற்றும் திறன் கொண்ட நபர்கள் மட்டுமே உயர் நீதிமன்றத்தால் சட்டத்தரணிகளாக அனுமதிக்கப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அத்தகைய சட்டத்தரணிகள் பதிவு செய்யப்பட்டவுடன் எந்தவொரு மோசடி, முறைகேடு, குற்றம் அல்லது குற்றத்தையும் செய்ய முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது, இது பொதுமக்களின் மற்றும் நாட்டில் நீதி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.
ஒரு சட்டத்தரணிக்கான எதிர்பார்த்த தரத்தை பராமரிக்க முடியாவிட்டால், அத்தகைய சட்டத்தரணி அந்தப் பதவியில் தொடர்ந்து செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், நல்ல பெயர், அறிவு மற்றும் திறன் கொண்ட நபர்கள் மட்டுமே சட்டத்தரணிகளாக செயற்பட வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பத்தை கருத்திற்கொள்வது நீதிமன்றத்தின் கடமை என்றும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் பிரதிவாதி சட்டத்தரணியின் நடத்தை, இந்த நாட்டில் ஒட்டுமொத்த சட்டத் துறையின் நற்பெயருக்கு எவ்வாறு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுவதற்கு மேலும் காரணங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதம நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பிறகு, நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 42 இன் படி, பிரதிவாதி சட்டத்தரணி உடனடியாக சட்டப் பணியிலிருந்து நீக்க உத்தரவிடப்படுவதாக பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த உத்தரவுக்கு அமைவாக செயற்பட்டு தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு பதிவாளருக்கு உத்தரவிட்டது.
