Aug 24, 2025 - 01:29 PM -
0
இந்தியாவின் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் வீதியில் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன். 26 வயதான இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியில் வசித்து வந்த ஹாசிதா என்ற 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் - மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஹாசிதா மாற்றுத்திறனாளி ஆவார். சிறுவயது முதலே இடதுகால் ஊனமுற்ற நிலையில் இருந்து வந்தார். இதுபோன்ற சூழலில் தான் நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போல பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு தொலைபேசி உனது கேரக்டர் சரியில்லை. நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறிய ஹர்சிதா நான் தர்ஷனுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

