Aug 27, 2025 - 01:16 PM -
0
இந்தியாவின் தேனி மாவட்டம் போடி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேலு (42). இவர் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து ஆண்டிவேலு தனக்கு தங்கை முறை உள்ள ஆனந்தராணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் ஊர் மக்கள் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆண்டிவேலு மற்றும் செல்வராணி ஆகியோர் போடியில் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், பல்வேறு தவறுகள் செய்து அவ்வப்போது குற்ற வழக்குகளில் ஆண்டுவேலு சிக்கி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பலாத்கார குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், ஆனந்தராணியை வீட்டில் சென்று பார்த்தபோது அவர், ஆண்டிவேலுவின் நண்பரான பாலமுருகன் (37) என்பவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றிருந்ததும் தெரிய வந்தது.
மேலும் பாலமுருகனும் ஆனந்த ராணியும் கணவன் மனைவியாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆண்டிவேலு, உன்னுடைய குழந்தையை நீயே வைத்துக்கொண்டு எனது மனைவியை என்னுடன் அனுப்பிவிடு என்று கூறி பாலமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப முடியாது என்று பாலமுருகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று (26) இரவு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த விவகாரத்தில் பாலமுருகனின் தந்தை நடராஜன் (63) என்பவரை ஆண்டிவேலு தாக்கியதில் நடராஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் கத்தியால் ஆண்டிவேலுவை சரமாரியாக குத்தியதில் ஆண்டுவேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாலமுருகனை கைது செய்த பொலிஸார் ஆண்டிவேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிவேலு தாக்கியதில் காயமடைந்த பாலமுருகனின் தந்தை நடராஜன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒரு மனைவிக்காக இரண்டு கணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

