Sep 3, 2025 - 05:26 PM -
0
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி, செய்திகளை தெரிந்து கொள்வது, நொடிக்கு நொடி தகவல்களை வழங்குவது, வங்கியில் பணம் பரிவர்த்தனை செய்வது என அனைத்துக்கும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், அத்தகைய செல்போனுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கவேண்டும். இல்லையென்றால், நம் உடல் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.
நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனால் தேவையற்ற மன அழுத்தம், தசைகளில் பாதிப்பு நரம்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம். செல்போன் பழக்கம் நீடித்துக் கொண்டே சென்றால் நம்மை மன நோய்க்கு ஆளாக்கி விடும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு இடையே சீரான அளவில் இடைவெளி எடுத்துக் கொண்டு அளவோடு மொபைல் போன் பயன்படுத்துவது இது போன்ற கடுமையான பாதிப்புகளை களைய உதவும்.
* உறக்கமின்மை
இரவு உறங்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தவறான பழக்கமாகும். இரவு நேரங்களில் செல்போனில் இருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் காரணமாக தூக்கம் கெடுவதோடு உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பலவித உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். முடிந்த அளவு, இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.
* பார்வை குறைபாடுகள்
செல்போனிலிருந்து வரும் நீல வெளிச்சம் எனப்படும் ஒளிக்கதிர்கள் நம்முடைய கண்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. கண்களில் வறட்சி, வலி, கார்னியா பாதிப்பு, பார்வை குறைபாடு போன்றவை இதனால் ஏற்படக் கூடும். எந்த அளவிற்கு மொபைல் போன் பயன்படுத்துவதை நாம் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய கண்கள் பாதுகாக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
* கூன் விழும் அபாயம்
நம்மில் பலர் செல்போனை பயன்படுத்தும்போது குனிந்த நிலையிலேயே அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம். இதனால் முதுகுவலி மற்றும் கழுத்துவலி அதிகம் ஏற்படும். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் கூன் முதுகு விழுந்துவிடும். மேலும், இந்த பாதிப்பை சரி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதனை தவிர்க்க கழுத்து பகுதியை வலுவாக்கும் உடற்பயிற்சிகளோடு சரியான அளவு ஓய்வும் வேண்டும்.
* காது கேட்கும் திறன் இழப்பு
சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சவுண்ட் வைத்து பயன்படுத்துவார்கள். இதனால் 30 முதல் 40 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழக்க நேரிடும். எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது ஒலி அளவை 50 சதவீதம் குறைத்து பயன்படுத்துங்கள். பாதிப்புகள் ஏற்படாது.
சில டிப்ஸ்...
* ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை குறைக்க இரவில் தூங்கும் போது அதனை உங்களிடமிருந்து விலக்கி வைக்க பழகுங்கள்.
* ஸ்மார்ட்போன் பழக்கத்தை குறைக்க இணையத்தை எப்போதும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
* காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் முகத்தில் தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்காமல் இருக்க பழகிக் கொள்ளலாம்.
* குடும்பம், புத்தகம், வாசிப்பு, சினிமா, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மாற்றம் செய்து கொள்வது சிறந்தது.

