Sep 4, 2025 - 01:28 PM -
0
இந்தியாவில் 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி 2,500 பேரை தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை.
இதற்கிடையே பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யும் போது, அரசு உத்தரவின்படி,
ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, அமைச்சுப் பணியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடத்தை இட ஒதுக்கீடு வழங்காமல், நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யக்கூடாது என்று இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தேர்வின் மூலம் நேரடி பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுதாரகள் தரப்பில், 2500 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனத்துக்காக காத்திருக்கும் நிலையில், தனி நீதிபதி உத்தரவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் , இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்துவிட்டு, 2,500 பேருக்கு நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், தேர்வு மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேரடி நியமனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2500 பேருக்கு அரசு பணி நியமன உத்தரவுகளை உடனே வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

