Sep 8, 2025 - 03:31 PM -
0
தற்போது உள்ள காலக்கட்டத்தில், வாழ்க்கை செலவுகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்காக மக்கள் வேலையை தேடி ஓடுகின்றனர். இதற்கிடையே, வார இறுதி என்பது அவர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். இந்த நேரத்தில், அவர்கள் முழுமையாக ஓய்வெடுக்கவும், தங்கள் ஆற்றலை மீட்டெடுக்கவும், வரும் வாரத்தை உற்சாகத்துடன் தொடங்கவும் உதவுகின்றன.
ஆனால், சமீபகாலமாக அதிகரித்து வரும் பணிச்சுமை காரணமாக, இரண்டு நாட்கள் வார இறுதி என்பது போதுமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. அதிலும் சிலருக்கு ஒரு நாள் மட்டுமே வார விடுமுறை இருக்கிறது. இதற்கு மத்தியில், மூன்று நாள் வீக் ஆஃப் வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது.
மூன்று நாள் வீக் ஆஃப் என்ற போக்கு தென் கொரியாவில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதற்கான காரணம் என்ன? மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தில் இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்பதை தற்போது பார்க்கலாம். தென் கொரிய தலைநகரான சியோலில் உள்ள சீவரன்ஸ் வைத்தியசாலையில் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வாரத்திற்கு 3 நாள் வீக் ஆஃப் என்ற தனித்துவமான முறை பின்பற்றப்பட்டது.
அல் ஜசீரா அறிக்கையின்படி, சீவரன்ஸ் வைத்தியசாலை தங்களது ஊழியர்களை தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்ய வைக்கிறது. மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கிறது. மருத்துவ ஊழியர்களின் பணியின் தரத்தை அதிகரிக்கும் வகையில், சீவரன்ஸ் வைத்தியசாலை இந்த முடிவை எடுத்தது. முதலில், இது சோதனை முறையில் இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த சோதனை 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன்படி, வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்களுக்கு, அதற்கு ஈடாக அவர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. அறிக்கையின்படி, வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, ஊழியர்களின் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. அத்துடன், அவர்களின் பணியின் தரம் அதிகரித்துள்ளதாம். தென் கொரிய ஊழியர்கள் தங்கள் அண்டை நாடான ஜப்பானின் ஊழியர்களை விட 248 மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறார்கள்.

