Sep 16, 2025 - 12:36 PM -
0
ஒரே வீடியோவில் பிரபலமான கூமாப்பட்டி தங்கபாண்டி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பியபோது பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எதாவது வீடியோவை வெளியிட்டால் அது சில சமயங்களில் வைரலாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராமத்தை தங்கப்பாண்டி ஒரே வீடியோவில் மிகவும் பிரபலமானார். அந்த வீடியோவில் ஏங்க எங்க ஊரை பாருங்க. தமிழ்நாட்டில் இப்படியொரு ஊர் இருக்கா, உலகத்துல இப்படியொரு ஊர் இருக்கா?, உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூமாப்பட்டிக்கு வந்து இந்த தண்ணியில குளிச்சா எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார்.
இவரது இந்த எதார்த்தமான பேச்சு, இளைஞர்கள் மத்தியில் வரவேற்றை பெற்றது. இதன் விளைவாக, அந்த கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று பலர் சுற்றுலா பயணிகள் கூமாப்பட்டிக்கு வரத் தொடங்கினர். இதனையடுத்து ரீல்ஸ்களை நம்பி யாரும் அணைக்கு வர வேண்டாம். அணைப் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதால், அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் தனியார் தொலைக்காட்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு பேருந்தில் கூமாபட்டிக்கு தங்கபாண்டி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன்கோவில் அருகே பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கதவில் மோதி தங்கப்பாண்டிக்கு இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

