Sep 22, 2025 - 10:51 AM -
0
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
மேலும், நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும். நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.
நவராத்திரியின் முதல் நாள் ஷைலபுத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் தூய்மை, அமைதி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
பக்தர்கள் ஆடை மட்டுமின்றி பூஜைக்கு வெள்ளை நிறங்களை கொண்ட மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களையும் பயன்படுத்தலாம். இவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.