Sep 24, 2025 - 09:49 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம் செய்த கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியில் 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவரது 49 வயது தந்தையும் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய கடந்த 22 ஆம் திகதி உத்தரவிட்டது.
பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் ஜெயசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பொலிஸ் கொஸ்தாபிள் சமரபந்து தலைமையில் ஜெயசிங்க, ரதன் உள்ளிட்ட குழுவினர், கடந்த 21 ஆம் திகதி இரவு, நகரிலுள்ள கண்ணகை அம்மன் கோயில் வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது பை ஒன்றுடன் நடந்து வந்த குறித்த நபரை பொலிஸார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். இதில், வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 49 வயது நபர் எனவும், இவரது 22 வயது மகன் மற்றும் லயன்ஸ் கிளப் வீதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆகியோர் மூன்று வாரங்களுக்கு முன் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர் எனவும் தெரியவந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தந்தையை பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவரை கடந்த 25 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

































