Sep 29, 2025 - 09:33 PM -
0
சென்னை, சூளைமேட்டை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் தான் திருமணம் செய்து கொள்வதற்காக திருமண செயலி ஒன்றில் பதிவு செய்திருந்ததாகவும், இதன் மூலம் சூர்யா (28) என்பவர் அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார்.
இருவரும் பின்னர் பழகி வந்தோம். அவர் என்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி எனது சம்மதத்தை பெற்றார்.
அதனை பயன்படுத்தி என்னுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்தார்.
மேலும், இருவரும் சேர்ந்து நிலம் வாங்கலாம் என கூறி என்னை காரில் அழைத்துச் சென்று இடத்தை காட்டி, அதற்காக என்னிடம் இருந்து ரொக்கமாக 8 லட்சம் ரூபாய் வரை பணம், 9 பவுண் தங்க நகைகள், லேப்டாப், கைப்பேசி என அனைத்தையும் வாங்கி கொண்டார்.
இப்படியே நாட்கள் கழியவே எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் என்னிடம் வாங்கிய பணம், நகை, மற்றும் பொருட்களை கேட்டபோது, நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை காட்டினார்.
அதனை பார்த்து அதிர்ந்தேன். அந்த படங்களை எல்லோரும் பார்க்கும் படி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி விடுவேன் என என்னை மிரட்டினார்.
பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சந்தேகம் அடைந்து அவர் குறித்து விசாரித்த போது மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
என்னை ஏமாற்றி என்னிடம் இருந்து நகைகள் பணம் பறித்து மோசடி செய்த சூர்யாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த முறைப்பாட்டில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி , தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை பொலிஸார் திருநெல்வேலிக்கு சென்று, அங்கு பதுங்கி இருந்த சூர்யாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அமைந்தகரை பாலம் அருகே வரும்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என சூர்யா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாலம் அருகே பொலிஸார் இறக்கி விடும்போது அங்கிருந்து தப்ப முயன்று, தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மேலும், பொலிஸார் நடத்திய விசாரணையில் இவர் 2024 ல் இதே போல் துரைப் பாக்கம் பகுதியில் ஒரு பெண்ணை ஏமாற்றி, வழக்கில் சிக்கியது தெரிய வந்தது.
இந்நிலையில் சந்தேகநபரிடம் இருந்து ஒரு கார், கைப்பேசி, லேப்டாப் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.