Sep 30, 2025 - 11:57 AM -
0
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த பொலிஸார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று (29) கைது செய்தனர். மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி இன்று (30) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு பொலிஸார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் முன் பிணை கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,
அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான பொலிஸார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரசார கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.