Oct 14, 2025 - 05:51 PM -
0
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் இறந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வந்த கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் கோல்ட்ரிப் இருமல் மருந்தில் டை எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களின் மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தயாரிப்பான கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டி.ஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகள் பாதிக்கப்பட்ட மருந்துகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்துகள் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த மருந்துகள் ஏதாவது நாட்டில் பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே புகாரளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டு உள்ளது.
முன்னதாக கலப்பட மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.