Jan 5, 2026 - 10:35 AM -
0
தற்போதைய காலத்தில் கைப்பேசிகள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரது கைகளிலும் மொபைல்கள் உள்ளன.
அதிலும் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக கைப்பேசிகள் மாறிவிட்டன.
இன்றைய ஜென்சி தலைமுறையினர் பலர் டிவி பார்க்காமல் இருந்து விடுவார்கள். மொபைல் இன்றி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கைப்பேசிகள் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது.
எனினும் இணைய வசதிதான் இதற்கு ஒக்சிஜன் போல உள்ளது. இணைய வசதி இல்லையென்றால் யூடியூபில் வீடியோ, லைவ் தொலைக்காட்சிகளை பார்க்க முடியாது.
ஆனால், இதனை மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ‘டிரைக்ட் டு மொபைல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் தொலைத்தொடர்புத் துறை ஈடுபட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் லைவ் டிவி நிகழ்ச்சிகளை மொபைலில் பார்வையாளர்கள் இணைய வசதி இல்லாமலேயே கண்டுகளிக்க முடியும்.
தற்சமயம் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த டெக்னாலஜியை கூடிய விரைவில் இந்தியாவில் 19 நகரங்களில் பெரும் அளவில் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதெப்படி இணையம் இல்லாமல் இயங்கும் என கேள்வி எழலாம். செயற்கைக்கோள் மூலம் நேரடியாக மொபைலுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப அடிப்படையில் இது இயங்கும்.
இதற்காக பிரத்யேக சிப் பொருத்தப்பட்ட செல்போன்களை தயாரிக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பெங்களூருவில் உள்ள ‘சான்கியா லேப்ஸ்’ என்ற நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
பேரிடர் காலங்களிலும் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கும் இது பெரும் பயனளிக்கும் என்று தெரிகிறது. இந்த சேவையை முடிந்தவரை விரைவாக கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில், இணைய சேவையால் பெரும் லாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

