Feb 4, 2026 - 08:29 AM -
0
இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பதில் பொதுச்செயலாளர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார், பதில் தலைவர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார். அவரை நீக்குவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லையென தலைவர் தெரிவித்திருந்தார். செயலாளர் அவரை நீக்கமுடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
நாங்கள் எப்போதும் நேர்மறையான கருத்தினை ஏற்றுக்கொள்பவர்கள். எங்களின் ஆதரவாளர்கள்,அபிமானிகள் எங்களிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு குடைந்துகொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது.
தலைவரின் கருத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அவரை நீக்குவதான தீர்மானத்தினை இன்னும் எடுக்கவில்லையென்று கூறியிருக்கின்றார்.
பலவந்தமாக நிர்ப்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது கட்சியின் வளர்ச்சியை தூண்டும் என்று சொல்வதை விட கட்சியினை பின்னிலையடையச்செய்யும் என்பதே எனது முடிவு.தலைவர் கூறிய கருத்திற்கு அமையவே நாங்கள் மக்களுக்கு கூறிவருகின்றோம் என தெரிவித்தார்.
--

