Mar 4, 2026 - 11:38 AM -
0
தனுஷின் 3 படம் மூலம் திரையுலகிற்கு வந்த கையோடு பிரபலமாகிவிட்டார் அனிருத் ரவிச்சந்தர். 2011 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த போது எப்படி இருந்தாரோ இன்றும் அதே மாதிரி சின்ன பையனாக தான் இருக்கிறார். அவரை பார்த்தால் 35 வயதானது மாதிரி தெரியவில்லை.
அனிருத்தே சும்மா அழகா, ஸ்டைலா ஹீரோ மாதிரி தானே இருக்கிறார். தற்போது இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது அதிகரித்து வருகிறது. இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் இன்று வித் லவ் படம் மூலம் ஹீரோவாகிவிட்டார்.
அட ரொமான்ஸ் எழுத வராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜோ இசை வீடியோவை அடுத்து டிசி படம் மூலம் ஹீரோவாகிவிட்டார். ஆனால் இந்த ஹேன்ட்சம் பாய் அனிருத் மட்டும் ஏன் இன்னும் ஹீரோவாகவில்லை என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது.
அனிருத்தை தேடி பட வாய்ப்புகள் வராமல் இல்லை. அப்படி தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்க மறுக்கிறார் அவர். எனக்கு இசை தான் தெரியும். நடிப்பு என் டிபார்ட்மென்ட் இல்லை. அதனால் அதுக்கு வேறு ஆளை பாருங்கள் என்று தன்னை ஹீரோவாக நடிக்கச் சொல்லி கேட்பவர்களிடம் கூறி வருகிறார் அனிருத்.
இந்நிலையில் உங்கள் நண்பர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகிவிட்டார். உங்களுக்கு அப்படியொரு ஐடியா இல்லையா அனிருத் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
நீங்க ஹீரோவாக நடிங்க லோகேஷ் கனகராஜ். ஆனால் நான் ஒரு போதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று அவரிடம் கூறினேன். எனக்கு இசையில் தான் ஆர்வம். நான் சினிமாவுக்கு வந்த 15 ஆண்டுகளில் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இன்னொரு ரவுண்டு போகணும். அதற்கு 15 ஆண்டுகள் போதாது. இசையில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. இசை வீடியோ மற்றும் ப்ரொமோ வீடியோவில் மட்டும் தான் வருவேன் என தெரிவித்தார்.
ப்ரொமோ வீடியோவில் அனிருத் வருவது அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் KHxRK பட ப்ரொமோவில் அனிருத் இருந்தார். முதலில் ரஜினிகாந்த் ரூமுக்கு போகலாமா இல்லை கமல் ஹாசன் ரூமுக்கு போகணுமா என்று நெல்சன் குழம்ப, அந்த வழியாக வந்த அனிருத்தோ இரண்டு விரலை காட்டி ஷண்முக ப்ரியாவா, கோகில ப்ரியாவானு கேட்க ஹீரோயினா என கேட்டார் இயக்குநர். ராகம்ஜினு கெத்தா சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தார் அனிருத். இந்த போர்ஷன் அனைவருக்கும் பிடித்திருந்தது.
அனிருத்துக்கு நடிப்பு வராது என்று சொல்ல முடியாது. ப்ரொமோ வீடியோக்களிலேயே மனுஷன் நல்லா நடிக்கிறார். யார் ஹீரோனு கமல் கேட்டதும் நல்லா மாட்டினியா நெல்சா என்பது போன்று எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் அனிருத். நடிப்பு வந்தாலும் நமக்கு வாழ்க்கை கொடுத்தது இசை தான். அதனால் தெரிந்த விஷயத்தை தொடர்ந்து செய்து மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று இருக்கிறார் அனிருத். அவரின் முடிவு நல்ல முடிவு தான்.
இதற்கிடையே அனிருத்தை விரைவில் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள் ரசிகர்கள். அனிருத் யாரையாவது காதலிக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அனிருத்துக்கு கல்யாணமாம், பொண்ணு அந்த நடிகையாம், அந்த பிரபலத்தின் மகளாம் என்று அவ்வப்போது வதந்தி தான் பரவிக் கொண்டிருக்கிறது.