Mar 4, 2026 - 06:07 PM -
0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதனை நிர்வகிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளை முன்கூட்டியே கணிக்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் புதிய முன்னேற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி, இந்த சவாலை கூட்டாக வெற்றிகொள்ளச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் தேவையான இருப்புகளை முகாமைத்துவம் செய்தல், அத்துடன் சுற்றுலா, ஏற்றுமதி, முதலீடு போன்ற துறைகளிலும், உணவுப் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படக்கூடிய நிலைமைகள் மற்றும் அதனால் நாட்டின் பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், அதனை நிர்வகிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதுள்ள எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டு தேவையான இருப்பைப் பேணுதல் மற்றும் முகாமைத்துவம் செய்தல், உலக சந்தையில் ஏற்படவுள்ள எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
எரிவாயு இருப்பைப் பேணுவதில் களஞ்சிய வசதிகள் போதாமையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைக் காண்பது குறித்தும், அதற்காகக் குறுகிய காலத்தில் பின்பற்றக்கூடிய உத்திகள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
சூயஸ் கால்வாய் மற்றும் ஹோர்முஸ் நீரிணை போன்ற இடங்கள் மூடப்படுவதால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படக்கூடிய தடைகள் காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக, நீண்டகாலமாக இலங்கையுடன் இணைந்து செயற்படும் கப்பல் நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
தற்போது நாட்டில் போதுமான உணவு இருப்பு காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இங்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.
இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வரும் ஐரோப்பிய வலயத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு ஊடாகவே நாட்டிற்கு வருவதால், நாட்டின் சுற்றுலாத்துறையைத் தொடர்ந்து பேணுவதற்காக விமானப் போக்குவரத்தில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
இதற்காகத் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
முதலீட்டுத் துறையில் ஏற்படக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதில் திட்டமிட்டுச் செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகச் சலுகைப் பொதியொன்றைத் தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய தலைமையில் அந்தப் பணிகளைக் கண்காணிக்குமாறும் நிதி அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.