Mar 7, 2026 - 08:34 PM -
0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டாவது துப்பாக்கிதாரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலையைச் செய்த பின்னர் தான் கொட்டாவை வரை காரில் வந்து, அங்கிருந்து இறங்கி கொழும்பு கோட்டையை அடைந்ததாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பின்னர் கோட்டையிலிருந்து தம்புள்ளை சென்றதாகவும், அங்கிருந்து தமக்காகவே 'கரந்தெனிய சுத்தா' என்பவரால் தயார் செய்யப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மூலம் மொனராகலைக்குத் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸார் நடத்திய தேடுதலில், மொரட்டுவை - கொழும்பு வீதியில் ஓடும் ஒரு தனியார் பேருந்தே, தம்புள்ளையிலிருந்து துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த பேருந்துடன் அதன் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை நேற்று பொலிஸார் கைது செய்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே, கரந்தெனிய சுத்தா என்பவரால் குறித்த பேருந்து 65 இலட்சம் ரூபாவிற்கு சாரதியின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதி, கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய சகா என்பதுடன் அவர் ஒரு கடும் போதைப்பொருள் அடிமை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய சுத்தாவின் அறிவுறுத்தலின் பேரிலேயே, தாமும் நடத்துனரும் தம்புள்ளை சென்று துப்பாக்கிதாரியை மொனராகலைக்கு அழைத்துச் சென்றதாகச் சாரதி ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லோகு பெட்டி' என்பவரைப் பழிவாங்குவதற்காகவே, அவரது சட்டத்தரணியைக் கொலை செய்வதற்கு கரந்தெனிய சுத்தா இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.