Mar 21, 2026 - 04:50 PM -
0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் ஒருவர் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அரியாலை பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தயாளினி திலீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த விரிவுரையாளரின் மகன், தனது தாயையும் சகோதரியையும் காணவில்லை என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், காணாமல் போன விரிவுரையாளரின் மகளும் இளைஞன் ஒருவரும் திருகோணமலை பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பொலிஸார் இருவரையும் மீட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தனர்.
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த இளைஞனிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. விரிவுரையாளரைத் தான் கொலை செய்து, அவரது சடலத்தைத் தனங்கிளப்பு பகுதியில் உள்ள காட்டுக்குள் வீசியதாக அந்த இளைஞன் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சந்தேகநபர் அடையாளப்படுத்திய இடத்திற்கு விரைந்த பொலிஸார், விரிவுரையாளரின் சடலத்தை மீட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
--
