Mar 30, 2026 - 11:04 AM -
0
ஜனநாயகன் படம் எப்படியும் மே மாதமே திரைக்கு வந்துவிடும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ஜூன் மாதம் வரை ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தை யஷ் நடித்திருக்கும் டாக்சிக் படத்தை ரிலீஸ் செய்த பிறகு வெளியிடலாம் என்று கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் தான் என் கடைசி படம். நான் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என்று அறிவித்தார் தவெக தலைவர் விஜய். ஜனநாயகனை பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் பார்க்கலாம் என்று அறிவித்தார்கள். ஆனால் படத்தில் உள்ள சில காட்சிகளால் சென்சார் சான்று கிடைக்காமல் போகவே ஜனவரி 9 ஆம் திகதி ஜனநாயகனை ரிலீஸ் செய்யவில்லை. இந்நிலையில் ரிலீஸ் குறித்து புது தகவல் வெளியாகியுள்ளது.
கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் த்ருவா சார்ஜாவின் கே.டி.- தி டெவில் படம் ஏப்ரல் 30 ஆம் திகதி ரிலீஸாகவிருக்கிறது.
இதையடுத்து அதே நிறுவன தயாரிப்பில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்திருக்கும் டாக்சிக் படம் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ரிலீஸாகிறது. டாக்சிக் படம் மார்ச் 19 ஆம் திகதியே வர வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். இந்நிலையில் கே.வி.என். தயாரிப்பில் அடுத்தடுத்து படங்கள் வருவதால் ஜனநாயகனை மே மாதம் அல்ல மாறாக டாக்சிக் ரிலீஸுக்கு பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஜனநாயகனை விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்வார்களோ என்றும் பேச்சு இருக்கிறது. இருந்தாலும் ஜனநாயகன் படத்திற்கு விஜய் போட்டு வைத்த திட்டமே வேறு. பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்து சரியாக தேர்தலுக்கு முன்பு வெளியிட்டால் அதை பார்க்கும் பெண்கள் எல்லோரும் விசில் சின்னத்தில் தவெகவுக்கே வாக்களிப்பார்கள் என நினைத்தாராம். பகவந்த் கேசரியில் ரொம்ப பயப்படும் பெண்ணை சிங்கப் பெண்ணாக மாற்றுவார் பாலகிருஷ்ணா. அதை தான் தமிழில் செய்திருக்கிறார் விஜய். ஆனால் இப்படி தேர்தலுக்கு முன்பு படம் வராமல் போய்விடும் என்று விஜய் எதிர்பார்க்கவில்லை.
சென்சார் போர்டை சான்று அளிக்குமாறு வலியுறுத்தச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்றது கே.வி.என். நிறுவனம். இதையடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவே, கே.வி.என். நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்பார்த்த மாதிரி தீர்ப்பு வராததை அடுத்து சென்சார் போர்டு முன்பே பரிந்துரை செய்தபடி ஜனநாயகனை மறு தணிக்கை குழுவிடம் சமர்பித்தார்கள். படம் பார்த்த மறு தணிக்கை குழுவோ இது தேர்தல் நேரம் என்பதாலும், விஜய் ஒரு வேட்பாளர் என்பதாலும் படத்திற்கு தேர்தல் ஆணையம் தடையில்லா சான்று அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.
கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் தான் தயாரித்திருக்கும் கே.டி.-தி டெவில், டாக்சிக் ரிலீஸில் கவனம் செலுத்த விஜய்யோ பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் வேலையில் இறங்கிவிட்டார்.
