Apr 3, 2026 - 04:30 PM -
0
நடிகர் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் ஒரு தீவிர விஜய் ரசிகர். இப்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலும், அவருடைய பதிவுகள் விஜய்க்கு ஆதரவாக இருக்கும். ஒவ்வொரு பிரச்சினை வரும்போது, தனது இன்ஸ்டா ஸ்டோரி வழியே விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார் சிபி சத்யராஜ்.
இவருடைய தங்கை திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அண்மையில் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தந்தையை தொடர்ந்து திவ்யா சத்யராஜூம் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவில் சேர்ந்ததும் தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில துணை செயலாளர் பொறுப்பு திவ்யா சத்யராஜூக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் திவ்யா சத்யராஜ். ஆனால், அவருக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. அவருக்கு கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், அதனை திவ்யா சத்யராஜ் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திவ்யா சத்யராஜ் கூறுகையில், “அம்மாவுக்கு நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லை. 6 வருடமாக கோமாவில் இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்வது தான் எனக்கு முக்கியம். அதனால் சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. தொண்டாமுத்தூர் தொகுயில் போட்டியிடும் கார்த்திகேயன் வெற்றிபெற வாழ்த்துகள்”.
“எனக்கு இந்த உலகத்திலேயே இரண்டு பேரை தான் மிகவும் பிடிக்கும். ஒன்று சத்யராஜ். மற்றொன்று சிபி ராஜ். இந்த இரண்டு பேர் தான் உலகம். இவர்கள் தான் எனக்கு எல்லாமே. சிபி சாருக்கு ப்ளூ பிடிக்கும். எனக்கு பிங்க் பிடிக்கும். அவருக்கு ப்ளூ பிடித்ததால் எனக்கும் அதுவே பிடிக்க வேண்டும் என்று அந்த அவசியமும் இல்லை. நாங்கள் முற்போக்கான குடும்பம். அதனால் எங்கள் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை” என தெரிவித்தார்.
