Apr 6, 2026 - 03:26 PM -
0
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், நடிகர் தனுஷுடனான தனது பிரிவு மற்றும் தற்போதைய நிலை குறித்து உருக்கமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷ் இடையிலான மோதல் 2024 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். நயன்தாராவின் திருமண ஆவணப்படமான 'Nayanthara Beyond the Fairytale' இல் இப்படத்தின் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்தியதற்காக, தனுஷ் 10 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பினார். இது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது தனது புதிய படமான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIC) படத்தின் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் விக்னேஷ் சிவன், சமீபத்தில் கோபிநாத் உடனான நேர்காணலில் தனுஷ் உடனான உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,
“நடிகர் தனுஷை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன். ஜூலை 28 ஆம் திகதி தனுஷுக்கு பிறந்தநாள். அதே ஜூலை 28 இல் தான் என்னுடைய அப்பா இறந்தார். தனுஷை என்னுடைய அப்பாவை நான் உணர்கிறேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு பிடிக்கும். ஆனால், சில நேரங்களில் சிலருடன் ஏன் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. அது குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை.
சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டன. தனுஷ் உடனான என்னுடைய நட்பு முறிவை என்னுடைய மிகப்பெரிய இழப்பாக நான் பார்க்கிறேன். அதே சமயம் நல்ல நட்பு உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அதை அவமானமாகவும் பார்க்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். இன்று நான் இப்படி ஒரு இடத்தில் இங்கே இருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் தனுஷ்.
என்னுடைய இந்த நிலைக்கு அவர் முக்கியமான காரணம். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் படப்பிடிப்பின்போது 2 வருடங்களுக்கும் மேல் அவருடன் தான் இருந்திருக்கிறேன். அப்போது அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். அப்படியான ஒரு உறவில் இருந்தேன்” என தெரிவித்தார்.
