Apr 7, 2026 - 01:08 PM -
0
தனது 37 ஆவது பிறந்தநாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் நடிகை சுபாஷினி. இந்நிலையில் அவரை நினைத்து உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் காதல் கணவரான பிபின்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வந்த சுபாஷினி கடந்த 05 ஆம் திகதி இரவு சென்னை ஐயப்பன்தாங்கலில் இருக்கும் வாடகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் கணவரான பிபின் சந்திராவுக்கு வீடியோ கால் செய்து பேசிய பிறகு தான் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள். 36 வயதான சுபாஷினி இறந்த செய்தி ரசிகர்களை கவலை அடைய செய்துள்ள நிலையில் அவரின் கணவர் பிபின் சந்திரா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்.
பெங்களூரில் வசித்து வரும் பிபின் சந்திரா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா. உன்னை போன்று என்னை யாரும் காதலித்தது இல்லை. நான் உன்னை போன்று வேறு யாரையும் காதலித்தது இல்லை. இன்று நீ உயிருடன் இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. என் நினைவுகளில், எனக்குள் நீ வாழ்கிறாய். நீ இங்கு இருப்பது போன்றே உணர்கிறேன். என்னை விட்டு ஏன் சென்றாய்?. உன் பிறந்தநாள், நம் திருமணநாளை கொண்டாட விரும்புகிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோமே பேபி என தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் திகதி சுபாஷினியின் பிறந்தநாளாகும். மேலும் ஏப்ரல் 21 ஆம் திகதி அவரின் திருமண நாளாகும். இப்படியொரு ஸ்பெஷலான மாதத்தில் வீடியோ காலில் கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார் சுபாஷினி.
அவரின் கடைசி இன்ஸ்டா போஸ்ட் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ளப் போகும் நபர் போட்ட போஸ்ட் மாதிரியே இல்லை என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
சுபாஷினியின் மரணத்தால் இன்ஸ்டாகிராம் பயன்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. எப்பொழுது பார்த்தாலும் சந்தோஷமாக போஸ்ட் போட்டு வந்திருக்கிறார் சுபாஷினி. மேலும் கணவர் பிபினும், சுபாஷினியும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால் அவர்களுக்கு இடையே சண்டை வந்தது மாதிரியே தெரியவில்லை. சமூக வலைதளங்களுக்காக சந்தோஷமாக இருப்பதாக போஸ்ட் போட்டிருக்கிறாரோ என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இலங்கையை சேர்ந்த சுபாஷினி நடிக்கும் ஆசையில் தான் இந்தியாவுக்கு வந்தார். படங்களில் நடித்த போதிலும் கயல் சீரியல் தான் அவருக்கு பெயரும், புகழும் தேடிக் கொடுத்தது. தன் கெரியர் நல்ல பாதையில் செல்லத் துவங்கிய சந்தோஷத்தில் இருந்து வந்த சுபாஷினி இப்படி ஒரு சண்டையில் உயிரை விடுவார் என எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சீரியல் ஷூட்டிங்கிற்காக தான் சென்னையில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார் அவர். ஒரு வேளை சண்டை வந்ததும் அவர் அருகில் யாராவது இருந்து ஆறுதல் சொல்லியிருந்தால் கோபத்தில் இப்படி அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டாரல்லவா என்று பேசப்படுகிறது.
