Apr 16, 2026 - 06:01 PM -
0
காதலுக்கு ‘வயது’ பெரிய தடையில்லை என்பதை சினிமா தொடங்கி கிரிக்கெட் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பிரபலங்கள் நிரூபித்து வருகின்றன. இருவரின் மனங்களும் ஒத்துப்போனால், வயது என்பது பெரிய தடையில்லை என்பது அவர்களின் வாதம். உதாரணமாக அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயை விட இளையவர். அதேபோல சச்சின் மனைவி அவரை விட மூத்தவர். இப்படி பல உதாரணங்கள் உண்டு.
அந்த வகையில் நடிகர் ஒரு 70 வயதில் 4 ஆவது திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி அவரை விட 29 ஆண்டுகள் இளையவர். கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ‘ஹல்சல்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கபீர் பேடி. ஷாருக்கானின் ‘மெ ஹூ னா’ (Main Hoon Na) உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
கடந்த ஆண்டு வெளியான பவன் கல்யாணின், ‘ஹர ஹர வீர மல்லு’ படத்திலும் நடித்திருந்தார். சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த கபீர் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்தது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல நேரங்களில் தலைப்புச் செய்தியாக மாறி கவனம் ஈர்த்துள்ளது.
நடன கலைஞரான பிரதிமா கவுரி என்பவரை கடந்த 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் நடிகர் கபீர் பேடி. இருவரும் காதலித்து வந்த நிலையில், பிரதிமாவின் குடும்பம் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும், இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், இந்த திருமண வாழ்க்கை விரைவில் கசந்தது.
இதனால் விவாகரத்து பெற்று பிரிந்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அடுத்து, அமெரிக்காவில் மாடலிங் செய்தபோது கபீர் பேடி, சூசன் ஹம்ப்ரீஸை சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது, அவர்கள் 1980 இல் திருமணம் செய்து 1990 இல் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஆடம் பேடி என்ற மகன் உள்ளார்.
பின்னர் கபீர் பேடி பிபிசி வானொலியில் பணியாற்றியபோது, அங்கு அவருடன் பணியாற்றிய நிக்கி முல்கவ்கர் என்பவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்து வந்த நிலையில், 1992 இல் திருமணம் செய்து கொண்டனர். நிக்கி முல்கவ்கர், கபீர் பேடியை விட 20 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிக்கி லண்டனில் வசித்து வந்தார், கபீர் இந்தியாவில் வசித்து வந்தார். இதனால், இருவருக்கும் இடையே தூரம் அதிகரித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2004 இல் இருவரும் பிரிந்தனர்.
அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் மீது காதல் கொண்டார் கபீர். அவர் கபீரை விட 29 வயது இளையவர். 2016 இல் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அப்போது கபீருக்கு வயது 70. தனது 70 ஆவது வயதில் 4 ஆவது திருமணம் செய்துகொண்டார் கபீர். தற்போது கபீர் பேடிக்கு 80 வயதாகிறது. தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
