Apr 20, 2026 - 04:48 PM -
0
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், குறித்த காலப்பகுதியில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புடன் கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை 18 ஆல் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விபத்துக்கள் 18 ஆக அதிகரித்துள்ளன. விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரதூரமான விபத்துக்கள் 94 ஆகவும், சிறு விபத்துக்கள் 49 ஆகவும் அதிகரித்துள்ளன. சொத்து சேதங்களை ஏற்படுத்திய விபத்துக்கள் 48 ஆக அதிகரித்துள்ளன.
விபத்துக்களைத் தடுக்க ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு செய்தோம், பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டோம். அவ்வாறான நிலையில் இவ்வாறானதொரு சூழல் காணப்படுகிறது. எனவே, பாரதூரமான வாகன விபத்துக்களைக் குறைக்க எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடமும் சாரதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
