Apr 24, 2026 - 04:06 PM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் பொதுப் பயணிகள் போக்குவரத்து முறைமையை நவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியமான ஆதரவாக, NCG Express உடன் இணைந்து முழுமையான டிஜிட்டல் பேருந்து பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் அட்டைகள், QR அடிப்படையிலான கொடுப்பனவுகள் மற்றும் தொடுகையில்லா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணங்களைச் செலுத்த முடியும். இந்தப் பங்குடைமையானது அரசாங்கத்தின் டிஜிட்டல் பயணச்சீட்டு முன்முயற்சியை ஆதரிப்பதுடன் மற்றும் இலங்கையின் தனியார் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கொடுப்பனவுக் கட்டண முறையை நடைமுறைப்படுத்தும் ஆரம்பகால பெரிய அளவிலான திட்டங்களில் ஒன்றாக அமைகிறது. பயணச்சீட்டு வழங்கும் சாதனங்களை பாதுகாப்பான கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் வங்கியின் ஏற்றுக்கொள்ளும்; வலையமைப்பினூடாக தானியங்கி தீர்வையை இணைப்பதன் மூலம், பணப் பயன்பாட்டைக் குறைத்தல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் கட்டணங்களைப் பெற்றுக்கொள்வதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்தப் பங்குடைமையின் கீழ், NCG Express பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்கள், கொமர்ஷல் வங்கியின் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் பயணச்சீட்டு சாதனங்களால் சீரமைக்கப்படுகின்றனர். ஒரு பயணி பேருந்தில் ஏறும் போது, நடத்துநர் பொருத்தமான கட்டணத்தை சாதனத்தில் உள்ளிடுகிறார். அதன்பின்னர், பயணி வரவட்டை அல்லது கடனட்டையை அல்லது Google Pay போன்ற கைபேசி Walletஐப் பயன்படுத்தி, அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தைச் செலுத்தலாம். இந்தப் பரிவர்த்தனைகள் வங்கியின் பாதுகாப்பான ஏற்றுக்கொள்ளுதல் வலையமைப்பு மூலம் உடனடியாக செயலாக்கப்படுகின்றன. இதன் மூலம் உடனடி உறுதிப்படுத்தல் கிடைப்பதோடு தடையற்ற, நிகழ்நேர கட்டணக் கொடுப்பனவுகள்; உறுதி செய்யப்படுகிறது.
பயணிகளுக்கு, இந்த டிஜிட்டல் பயணசீட்டு முறை பல நன்மைகளை வழங்குகிறது. அவற்றில் பணமில்லா கொடுப்பனவு வசதிகள், சரியான சில்லறைப் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமை, மேலும் வேகமான மற்றும் தொடுகையில்லாப் பரிவர்த்தனைகள் அடங்கும். வெளிப்படையான டிஜிட்டல் பதிவுகள், பயணசீட்டு முறையில் நம்பிக்கையை அதிகரிக்க உதவுவதோடு, உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப மேலும் மென்மையான மற்றும் நவீனமான பயண அனுபவத்தையும் வழங்குகின்றன.
இந்த முயற்சி தொடர்பாக கொமர்ஷல் வங்கியின் உதவிப் பொதுமுகாமையாளர் – தனிநபர் வங்கிச் சேவை/சில்லறை தயாரிப்புகள் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த திரு. கபில லியனகே தெரிவிக்கையில்:
இந்தப் பங்குடைமையானது, டிஜிட்டல் கொடுப்பனவுப் புதுமைகளை முன்னேற்றுவதிலும், இலங்கையின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை ஆதரிப்பதிலும் கொமர்ஷல் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியாக, பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற அன்றாடம், அதிக அளவில் நடைபெறும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்குவது, பணமில்லா கொடுப்பனவு முறைகளின் பயன்பாட்டை வேகமாக உயர்த்துவதற்கான முக்கியமான படியாக வங்கி கருதுகிறது. இதன் மூலம் போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள் மேலும் திறம்படவும் வெளிப்படையாகவும் செயல்பட முடியும்.
இதனை அமுற்படுத்தும் ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட NCG Express வழித்தடங்களில்; தொடங்கப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட செயல்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த முறைமையானது பிரபலமான இந்தச் சேவை வழங்குநரின் முழு பேருந்துக்குழுவிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
NCG Express நிறுவனத்தின் தலைவர் திரு. நிகித கிரேரோ தெரிவிக்கையில்:
இலங்கையின் போக்குவரத்து துறையை மாற்றும் எமது அர்ப்பணிப்புடன் இணைந்து, எமது பயணிகளுக்கு வசதியான மற்றும் தடையற்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறையை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் பங்குடைமையானது வெறும் வசதியை மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் பணமில்லா போக்குவரத்துச் சூழலை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் போக்குவரத்து உட்கட்டமைப்பின் தரநிலைகளையும் மேம்படுத்துகிறது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
