Apr 27, 2026 - 04:34 PM -
0
சர்வதேச விளையாட்டு, கேமிங் மற்றும் கலாச்சார நிறுவனமான Scara நிறுவனத்தின் நேரலை அனுபவப் பிரிவான Scara Live, ஆப்கானிஸ்தான் Tapeball கிரிக்கெட்டுடன் இணைந்து ‘Tapeball ஆசியக் கோப்பையை’ முதன்முறையாக நடத்தவுள்ளது. இப்போட்டிகள் மூலம் இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெறுகிறது. இது சர்வதேச Tapeball கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட முதல் உத்தியோகபூர்வ கண்ட ரீதியான Tapeball போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இப் போட்டி, 2026 செப்டெம்பர் மாதம் கொழும்பு கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைசிறந்த அணிகள் போட்டியிடவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள Tapeball ஆசியக் கோப்பையானது புதிய சகாப்தத்தை குறிப்பதுடன் தெற்காசியாவில் இவ் விளையாட்டின் பரவலையும் அங்கீகாரத்தையும் விரிவுபடுத்துகின்றது. போட்டியை நடத்தும் நாடாக இலங்கை, தெற்காசியாவில் Tapeball கிரிக்கெட்டின் தடத்தை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். இவ்விளையாட்டின் வளர்ச்சிக்கும் சர்வதேச அங்கீகாரத்திற்கும் பிரதான மையமாக தன்னை நிலைநிறுத்துவதில் இலங்கைக்கு இது ஒரு முக்கிய படிக்கல்லாக அமைகிறது.
கராச்சியின் வீதிகளில் தோன்றிய Tapeball கிரிக்கெட், மின்சார டேப் (Tape) ஆல் சுற்றப்பட்ட டென்னிஸ் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் வேகமான விளையாட்டு வடிவமாகும். எளிதில் அணுகக்கூடிய தன்மையும் இயல்பான திறமையையும் மையமாகக் கொண்ட இது, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் பரவலாக விளையாடப்படும் பிரபலமான வடிவமாக வளர்ந்துள்ளது.
Scara Live இப் போட்டி தொடர்பான ஒளிபரப்பு, திறன் முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் பரவல் உள்ளிட்ட போட்டியின் முழு தயாரிப்புப் பணிகளையும் நிர்வகிக்கும். புதிய தலைமுறை ரசிகர்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட, ஆற்றல் மிக்க, கலாச்சார ரீதியாகப் பொருத்தமான விளையாட்டு அனுபவத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இது ரசிகர்கள் Tapeball இன் ஆற்றலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அனுபவிப்பதற்கான முழுமையான தளத்தை அளிக்கும்.
சர்வதேச Tapeball கவுன்சிலின் ஊடகப் பேச்சாளர் அமீர் சித்தீக் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், தெருக் கலாச்சாரம் மற்றும் சமூக விளையாட்டில் வேரூன்றிய Tapeball, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் இயல்பாகவும் பரவலாகவும் விளையாடப்படும் கிரிக்கெட் வடிவங்களில் ஒன்றாகும். Tapeball ஆசியக் கோப்பை மூலம் இவ் விளையாட்டை முறைமைப்படுத்தி உலகமயமாக்குவதற்கான தீர்மானமிக்க படியை நாங்கள் முன்னெடுத்து வைக்கிறோம். Scara Live உடனான இணைவு போட்டியின் தீவிரத்தை இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நவீன படைப்பாக வழங்க எங்களுக்கு உதவுகிறது. மேலும் இது இன்றைய பார்வையாளர்கள் விளையாட்டை எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கின்றது. என்றார்.
ஆப்கானிஸ்தான் Tapeball கிரிக்கெட்டின் பிரதிநிதியான ஷீர் ரஹ்மான் காட்டர் மேலும் கூறுகையில், முதன்முறையாக நடைபெறும் Tapeball ஆசியக் கோப்பையை முன்னின்று நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது இந்த விளையாட்டுக்கும் அதன் வளர்ந்து வரும் சமூகத்திற்கும் ஒரு மைல்கல் தருணமாகும். Tapeball எப்போதுமே பேரார்வம், அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய தன்மை மற்றும் இயல்பான திறமை ஆகியவை பற்றியது. Scara Live வழங்கும் நேரடி ஒளிபரப்பு அனுபவத்துடன் இப்பிராந்தியம் எங்கும் உள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் போட்டியை வழங்க எதிர்பார்த்துள்ளோம். Tapeball ஐ ஒழுங்கமைக்கப்பட்ட போட்டிகளின் புதிய சகாப்தத்திற்கு உயர்த்துவோம் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.
Scara இன் நிறுவனர் மனோஜ் ஜோர்ஜ் குறிப்பிடுகையில், இலங்கையில் நடைபெறும் முதல் Tapeball ஆசியக் கோப்பை போட்டியானது வெறுமனே போட்டியல்ல. இது வீதிகளில் பிறந்த பேரார்வம், இயல்பான திறமை மற்றும் தெற்காசியாவை ஒன்றிணைக்கும் கிரிக்கெட் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும். சர்வதேச தரத்திலான நடைமுறைகள், கதைசொல்லல் மற்றும் ரசிகர்களின் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் இதை உயிர்ப்பிக்க நாங்கள் ஆவலாக உள்ளோம். என்றார்.
இப்பிராந்தியமெங்கும் உள்ள ரசிகர்கள் வரவிருக்கும் போட்டியை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். Tapeball ஆசியக் கோப்பையானது, எதிர்கால ஒழுங்கமைக்கப்பட்ட போட்டிகள், பரந்த ரசிகர் ஈடுபாடு மற்றும் Tapeball கிரிக்கெட்டிற்கான எதிர்கால சர்வதேச வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. ரசிகர்கள் மற்றும் இவ் விளையாட்டுக்குப் புதியவர்கள், இப் போட்டி தொடர்பான அணிகள், போட்டி அட்டவணை மற்றும் ஒளிபரப்பு விபரங்கள் குறித்த தகவல்களைப் பெற, Tapeball ஆசியக் கோப்பையின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமான Tapeball Asia Cup ஐப் பின்தொடரலாம்.
Scara Live தொடர்பாக
Scara என்பது விளையாட்டு, கேமிங் மற்றும் கலாச்சாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு சர்வதேச படைப்பற்றல்மிக்க நிறுவனம் ஆகும். இந்தியா, ஆபிரிக்கா, MENA மற்றும் துருக்கி முழுவதும் உள்ள குழுக்களுடன் இணைந்து Scara துணிச்சலான எண்ணங்கள், ஆழ்ந்த அனுபவங்கள் மற்றும் தரவு சார்ந்த கதைசொல்லல் மூலம் வர்த்தக நாமங்களை இணைக்கிறது. இதன் மூலம், வர்த்தக நாமங்கள் தங்கள் பார்வையாளர்கள் விரும்பும் உலகங்களுடன் அர்த்தமுள்ள முறையில் இணைவதற்கான சூழலை உருவாக்குகிறது.
Scara Live என்பது எண்ணக் கருத்துக்களை நிஜ உலகிற்குக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட, அந் நிறுவனத்தின் நேரடி அனுபவப் பிரிவாகும். விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைவில் இயங்கும் Scara Live, பார்வையாளர்களுடனான தொடர்பையும் அளவிடக்கூடிய வர்த்தக நாம மதிப்பையும் உருவாக்கும் உயர் தாக்க அனுபவங்களை அளிக்கிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் Scara இன் நிபுணத்துவத்தின் ஆதரவுடன் Scara Live கலாச்சாரத் தருணங்களை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகளாக மாற்றுகிறது. இதனை தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் சர்வதேச வலையமைப்பால் வலுப்படுத்தப்பட்ட நிகழ்வுகள், அறிவுசார் சொத்துரிமைகள் (IPs) மற்றும் களச் செயல்பாடுகள் ஊடாக நிகழ்த்துகின்றது. வெறும் செயலாக்கத்தைத் தாண்டி, நிறுவனத்தின மூலோபாய நீட்சியாகச் செயல்பட்டு, நேரடி அனுபவங்களை நீண்டகால வர்த்தக நாம சொத்துக்களாக மாற்றுவதோடு, வேகமாக மாறிவரும், டிஜிட்டல் மயமான சூழலில் வர்த்தக நாமங்கள் முன்னிலை வகிக்க உதவுகிறது.
