Apr 28, 2026 - 03:07 PM -
0
நிலைபெறுதகு எதிர்காலத்தை உருவாக்கும் தனது உறுதிப்பாட்டிற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது, தனது நிலைபேறுதன்மையை நோக்கிய பயணத்தில் முக்கியமான புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காலி மாவட்டத்தில் உள்ள கன்னெலிய பாதுகாப்பு வனப் (Kanneliya Conservation Forest) பகுதியில் சேதமடைந்த ஒரு பகுதியை மீளமைக்கும் பணியை மேற்கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இயற்கையினால் ஆதரிக்கப்படும் வளர்ச்சிக்கும் தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பை ஊக்குவிப்பதற்காக, தனியார் துறையினரால் உருவாக்கப்பட்ட Biodiversity Sri Lanka (BSL) அமைப்பின் பங்குடைமையுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இது இலங்கையின் சிதைவடைந்த வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கும் ஒரு இலட்சிய, பன்முகத் தரப்பு முயற்சி கொண்ட எங்கள் வனங்களுக்கான வாழ்க்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும்,சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கமானது (International Union for Conservation of Nature- IUCN) இந்த கன்னெலிய திட்டத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை மேற்கொள்வதால், இந்த மீளமைப்பு முயற்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் தரநிலைகளுக்கும் சிறந்த நடைமுறைகளுக்கும் ஏற்ப நடைபெறுவதை உறுதிப்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டு உலக புவி தினக் கொண்டாட்டங்களுக்கு இணையாக, கன்னெலிய வனப் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹெக்டேயர் சிதைவடைந்த மழைக்காட்டை மீட்டெடுக்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது .இது யுனெஸ்கோவால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் தெற்காசியாவின் மிகச் சிறந்த தாவர வளம் மிக்க பிராந்தியங்களில் ஒன்றாகும். தற்போது ‘Kekilla’ என உள்நாட்டில் அழைக்கப்படும் Dicranopteris linearis என்ற பனை வகைச் செடியால் மிக அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியானது, இந்த ஆக்கிரமிப்பு தன்மை காரணமாக, முழுமையான அறிவியல் அடிப்படையிலான மீளமைப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
2026 முதல் 2032 வரை ஆறு ஆண்டு காலப்பகுதியைக் கொண்ட இந்த முன்னெடுப்பானது, 2026-2028 வரையிலான ஆரம்பக் கட்டத்துடன் தொடங்குகிறது. இது தளம் தயாரிப்பு மற்றும் ஆரம்பகட்ட மறுசீரமைப்பு, அதைத் தொடர்ந்து நீண்ட கால சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மேம்பாட்டை உள்ளடக்கியது. இந்த மறுசீரமைப்பு உத்தியானது கெகில்லா செடிகளை அகற்றுதல், நாற்றுப்பண்ணைகளை நிறுவுதல், பூர்வீக மற்றும் முன்னோடி மரங்களை நடுதல் மற்றும் மண் தரம் மற்றும் வாழ்விட நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. காடுகளை அழிவிலிருந்து தடுக்கவும், தொடர்ந்து சுற்றுச்சூழல் கண்காணிப்பை உறுதி செய்யவும், இந்த நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும்.
இந்த முக்கிய மழைக்காட்டு வாழிடத்தை மீட்டெடுப்பது, மேம்பட்ட பல்லுயிர் பெருக்கம், சிறந்த நீர் தேக்கம், வலுவூட்டப்பட்ட மண் நிலைத்தன்மை மற்றும் அதிகரித்த சூழலியல் இணைப்பு உள்ளிட்ட தொலைநோக்கு சுற்றுச்சூழல் நன்மைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் அத்தியாவசிய நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கிறது, இது நாட்டின் மிக முக்கியமான பல்லுயிர் மையங்களில் ஒன்றைப் பாதுகாப்பதன் பரந்த முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தத் திட்டமானது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதைத் தாண்டி, சுற்றியுள்ள சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்கிறது. மறுசீரமைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் கிராம மக்களைப் பணியாளர்களாக ஈடுபடுத்துவதன் மூலம், இந்த முயற்சி அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை ஆதரிக்கிறது. இந்த உள்ளடக்க அணுகுமுறை பாதுகாப்பு முயற்சிகள் சமூக அபிவிருத்தியுடன் நெருக்கமாக இணங்குவதை உறுதிசெய்கிறது, இது பிராந்தியத்திற்கு நீண்ட கால சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை வழங்குவதோடு, மக்களிடையே பொறுப்புணர்வையும் வளர்க்கிறது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 272 தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
