May 4, 2026 - 03:34 PM -
0
செலான் வங்கி பிஎல்சி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை (ICT) மற்றும் Make-A-Wish Sri Lanka ஆகியவற்றுடனான ஓராண்டு நிறைவை, 2026 ஏப்ரல் 29 அன்று கொண்டாடியது. இந்த கூட்டு முயற்சி ஊடாக, கடந்த ஆண்டில் கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களுக்கு நம்பிக்கையையும் அர்த்தமுள்ள அனுபவங்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகரகமவில் உள்ள சுவ அரன – குணமளிக்கும் இடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வானது, Make-A-Wish Internationalஇன் உரிமம் பெற்ற பிராந்தியமாக Make-A-Wish Sri Lanka ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அடைந்த முன்னேற்றங்களை மீட்டுப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு, சிறுவர்கள், அவர்களின் குடும்பங்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பங்காளர்களை ஒன்றிணைத்தது. உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக செலான் வங்கி கடந்த ஆண்டில் நிதி ஆதரவு வழங்குதல், பொது பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றினூடாக பங்களித்தது. மகிழ்ச்சியும் அர்த்தமுள்ள தாக்கங்களையும் ஏற்படுத்திய கடந்த ஆண்டை கொண்டாடும் விதமாக, வங்கி ஊழியர்கள் ரூ.10 மில்லியன் பெறுமதியான தன்னார்வ பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப் பங்களிப்பு, இக் கூட்டாண்மை அதன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நன்கொடையானது சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களிற்கு நம்பிக்கையை அளிக்கிறது. மேலும், செலானின் இஸ்லாமிய வங்கிப் பிரிவும் மருந்து, போக்குவரத்து மற்றும் நோயாளி நலன் போன்றவற்றிற்கு ஆதரவளிப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையை விஸ்தரிப்பதற்கும் இந்த முயற்சியின் ஒட்டுமொத்த நன்மைகளை வலுப்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது.
செலான் வங்கி பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,
“அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், நாங்கள் சேவை செய்யும் சமூகங்களில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம் ஆகும். கடந்த ஆண்டில், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் Make-A-Wish Sri Lanka உடனான எங்களின் இணைவு ஊடாக சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களிற்கு மிகவும் கடினமான காலங்களில் எங்களால் உதவக் கூடியதாகவிருந்தது. இந்த இணைவு மூலம் இச் சிறுவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர உழைத்த அனைவரின் முயற்சிகளிற்கும் செலான் வங்கியின் ஊழியர்களின் தாராள மனப்பான்மை மற்றும் பரிவுணர்விற்கும் எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சியை விரிவுபடுத்துவதோடு, எங்கள் நிறுவனம் மட்டுமின்றி வெளியேயுள்ள சமூகத்திலும் பரந்த பங்கேற்பை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்றார்.
எதிர்காலத்தில், செலான் வங்கியானது, ICT மற்றும் சுவ அரனவுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட பணியாளர் தன்னார்வத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தமது ஊழியர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கவும் அவர்களுடன் ஈடுபடவும் வழிவகை செய்ய உள்ளது. ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து Make-A-Wish Sri Lanka, கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட 150இற்கும் மேற்பட்ட சிறுவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களுக்கு மகிழ்ச்சி, ஊக்கம் மற்றும் மன வலிமையை வழங்கும் தருணங்களை அளித்துள்ளது. இவ் விருப்ப அனுபவங்கள், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் வழிநடத்தப்படும் பரந்த பராமரிப்பு அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இது மருத்துவ ஆதரவை உளவியல் மற்றும் உணர்வு மேம்பாட்டுடன் ஒருங்கிணைக்கின்றது.
நாட்டில் Make-A-Wish Sri Lanka இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவரும் அறங்காவலருமான, Dr.லங்கா ஜயசூரிய திஸாநாயக்க, “தேவையுள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் விருப்பங்களை நிறைவேற்றிய ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில் பூர்த்தியடையும் விருப்பங்கள் அளிக்கக்கூடிய அளப்பரிய குணமளிப்பை நாங்கள் உணர்கிறோம். நம்பிக்கையை ஊக்குவிக்கும் இந்த தொலைநோக்குப் பார்வையுடன், கடுமையான நோய்களுடன் போராடும் சிறுவர்களுக்காக இன்று மேலும் 70 விருப்பங்களை நிறைவேற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.
இந்த ஓராண்டு நிறைவு நிகழ்வானது, விருப்பங்கள் நிறைவேற்றப்பட்ட சிறுவர்களின் கதைகளை சிறப்பித்ததுடன், ஒவ்வொரு விருப்பத்தையும் சாத்தியமாக்குவதில் கூட்டு ஆதரவின் பங்கையும் எடுத்துக்காட்டியது. அத்துடன் பங்காளர்களுக்கு தற்போதைய முன்னெடுப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் Make-A-Wish Sri Lanka, மருத்துவ சிகிச்சைகளுக்குத் துணையாக, சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன நலனை மேம்படுத்தி வருகிறது. வாழ்க்கையை மாற்றும் விருப்ப அனுபவங்களை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி நம்பிக்கையை வளர்க்கிறது.
இக் கூட்டாண்மை, சுகாதாரத் துறைக்கு அப்பாற்பட்டு நீடித்த மாற்றத்தை உருவாக்க நிதி நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
