May 7, 2026 - 01:57 PM -
0
இலங்கையின் முன்னணி மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல்கள் முகவர் நிறுவனமான Mark and Comm (Pvt) Ltd, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 15ஆவது ACEF Global நுகர்வோர் ஈடுபாடு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு தங்க விருதுகளை சுவீகரித்துள்ளது. 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி மும்பை வெஸ்ட்டின் கார்டன் சிட்டி ஹோட்டலில் இந்த விருதுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனம் எனும் உயர்ந்த விருதையும், ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்புகள் நிபுணர் விருதையும் இந்நிறுவனம் சுவீகரித்திருந்தது. நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளரான தன்சில் தாஜுதீன் இந்த சிறந்த மக்கள் தொடர்புகள் நிபுணருக்கான விருதை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
15ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட ACEF Global நுகர்வோர் ஈடுபாடு விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஆசியாவின் நன்மதிப்பைப் பெற்ற கௌரவிப்புகளை வழங்கும் அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர் ஈடுபாடு, வர்த்தக நாம மூலோபாயம் மற்றும் தொடர்பாடல்கள் ஆகியவற்றில் சிறப்பை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், சிங்கப்பூர் மற்றும் இதர நாடுகளிலிருந்து இந்த விருதுகளுக்காக விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. பிராந்திய மட்டத்தில் கடுமையான போட்டிகளுக்கு முகங்கொடுத்து, Mark and Comm இந்த இரட்டை தங்க விருதுகளை சுவீகரித்திருந்தமை, சர்வதேச மட்டத்தில் இலங்கையின் மக்கள் தொடர்புகள் துறைக்கு கிடைத்த உயர்ந்த கௌரவிப்பாக அமைந்துள்ளது. Mark and Comm தனது வியாபார செயற்பாடுகளை ஆரம்பித்து 15 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்த விருதுகள் கிடைத்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சிறியளவிலான ஆலோசனை வழங்கல்களுடன் ஆரம்பித்து, தற்போது சர்வதேச ரீதியில் தொடர்புகளைக் கொண்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்து, காப்புறுதி, போக்குவரத்து, நிதிச் சேவைகள், தொழில்னுட்பம், விருந்தோம்பல், வலு, விவசாயம், சுகாதாரபராமரிப்பு, கல்வி மற்றும் நிலைபேறாண்மை போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் பணியாற்றுகிறது.
இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “ACEF இல் இரட்டை விருதுகளை வென்றுள்ளமையானது, தொடர்ச்சியாக நாம் சிறப்பாக செயலாற்றி வருகின்றமையை பிரதிபலித்துள்ளது. Mark and Comm தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 15 வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், தொடர்பாடல்களில் வியாபாரங்கள் மற்றும் நபர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த நம்பிக்கை, அதிகளவு சென்றடைவு மற்றும் சர்வதேச நோக்கு ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.” என்றார்.
குறித்த நிறுவனத்திற்கு சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து கிடைத்து வரும் கௌரவங்களின் ஒரு தொடர்ச்சியாக இந்த அங்கீகாரம் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, பிராந்திய ரீதியில் மிகவும் போட்டித்தன்மை மிக்கதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதுமான தரவரிசைகளில் ஒன்றான Campaign Asia- Pacific இன் ஆண்டின் சிறந்த நிறுவன (Agency of the Year Awards 2025) விருது விழாவில், Mark and Comm நிறுவனம் தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கான ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பு (PR) நிறுவனம் ஆகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mark and Comm நிறுவனத்தின் சர்வதேச நற்பெயரானது தனிப்பட்ட விருதுகளுக்கு அப்பால் பரந்து காணப்படுகின்றது. 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் 80 இற்கும் அதிகமான சுயாதீன மக்கள் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பான GlobalCom PR Network இன் ஒரு அங்கத்துவ நிறுவனமாக இது விளங்குவதுடன், ஆசிய பசுபிக் பிராந்திய மக்கள் தொடர்பு மற்றும் தொடர்பாடல் சங்கத்தின் (PRCA Asia Pacific) கூட்டாண்மை அங்கத்துவத்தையும் கொண்டுள்ளது. PRCA APAC இன் பணிப்பாளர் சபையிலும், CIPR இன் சர்வதேசக் குழுவிலும் தாஜுதீன் அங்கம் வகிக்கின்றார். அத்துடன் அவர் Campaign Asia-Pacific இனால் 2024 ஆம் ஆண்டுக்கான 40 வயதுக்கு உட்பட்ட சிறந்த 40 ஆளுமைகள் (40 Under 40) பட்டியலில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டார். அவர் ஒரு பட்டய மக்கள் தொடர்பு நிபுணர் என்பதோடு, Chartered Institute of Public Relations, Chartered Institute of Marketing மற்றும் Chartered Management Institute ஆகியவற்றின் Fellowship தகைமைகளையும் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் PRCA சபை மற்றும் CIPR இன் தொழில்முறைத் தரநிலைச் செயற்குழு ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான Hootsuite and Talkwalker இன் பிரத்தியேக பங்காளராக இந்த முகவர் நிறுவனம் இயங்குகிறது. அதனூடாக நிறுவனதரத்திலான சமூக ஊடக முகாமைத்துவம் மற்றும் அசல்-நேர நுகர்வோர் மதிநுட்பத்தை பிராந்தியத்தில் வழங்குகிறது.
தாஜுதீன் மேலும் குறிப்பிடுகையில், “பதினைந்து வருடங்கள் என்பது வெறும் மைல்கல் மட்டுமல்ல. மூலோபாய, கொள்கைகளுடனான தொடர்பாடல்கள், நீண்ட கால அடிப்படையில் பெறுபேறுகளை வழங்கும் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது. எம்மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றும் சகல வாடிக்கையாளர்களுக்கும், அதனை நிறைவேற்றும் சகல ஊழிய அங்கத்தவருக்கும் இந்த விருது உரித்தாகும்.” என்றார்.
