May 11, 2026 - 11:10 AM -
0
Citrus Waskaduwa ஹோட்டலில் உள்ள Mandarin Shore Grand Ballroom நிகழ்வு மண்டபத்தில் 2026 பெப்ரவரி 25, புதன்கிழமையன்று ஏற்பாடு செய்த வைபவத்தில் தனது முதற்தொகுதி பட்டதாரிகளைக் கொண்டாடியுள்ளதன் மூலமாக, Citrus School of Hotel Management ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அர்த்தமுள்ள சாதனை மைற்கல் ஒன்றினை Citrus Leisure PLC நிலைநாட்டியுள்ளது.
George Steuart & Company நிறுவனத்தின் 190 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், “Steuart Senehasa” தளத்தின் கீழ் இக்குழுமம் முன்னெடுக்கின்ற பரந்தளவிலான சமூக மேம்பாட்டு முயற்சிகளின் அங்கமாகவும் காணப்படுகின்றது. ஜோர்ஜ் ஸ்டுவர்ட் நிறுவனம் மிக நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்ற “Purpose Beyond Profit” என்ற நெறிமுறையை இம்முயற்சி பிரதிபலிப்பதுடன், சமூகத்தில் அர்த்தமுள்ள விளைவைத் தோற்றுவித்து, நிலைபேற்றியல் கொண்ட வணிகங்களைக் கட்டியெழுப்புவதில் குழுமத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.
அங்குரார்ப்பணத் தொகுதியானது 2025 ஜுலை 15 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், வகுப்பறையில் கோட்பாட்டு ரீதியான கற்றல் மற்றும் நேரடி நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றை இணைக்கும் தீவிரமான கற்கை அடங்கிய ஆறு மாத காலப் பயணத்தைத் தொடர்ந்து 2026 ஜனவரி 15 அன்று இந்நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். நிதியியல் ரீதியாக முட்டுக்கட்டைகளுக்கு முகங்கொடுத்துள்ள விருந்தோம்பல் துறையில் வளம் பெறத் துடிக்கும் மாணவர்கள் மற்றும் இலங்கையில் விருந்தோம்பல் துறையில் ஆளணிப் பற்றாக்குறை அதிகரித்துச் செல்லும் போக்கு ஆகிய இரண்டுக்கும் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்ரீதியான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு வாய்ப்புக்களை இம்முயற்சி தோற்றுவித்துள்ளது.
இந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்காவிட்டால், தனியார் ஹோட்டல் பாடசாலைகளில் சேர்ந்து கற்றுக்கொள்வதற்கான வசதிகளை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது போயிருக்கும். மேலும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் ஆகியவற்றுக்குத் தொடர்ந்தும் மிக முக்கியமாகக் காணப்படுகின்ற ஒரு துறையை வலுப்படுத்துவதற்கும் இதன் மூலமாகப் பங்களிக்க முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மொத்தமாக 18 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளதுடன், உணவு மற்றும் பான வகை சேவை (4 மாணவர்கள்), சமையலறை தொழிற்பாடுகள் (13 மாணவர்கள்), மற்றும் முன்னலுவலக தொழிற்பாடுகள் (1 மாணவர்) அடங்கலாக விருந்தோம்பல் துறையின் முக்கிய பிரிவுகள் மத்தியில் அவர்கள் பாண்டித்தியம் பெற்றுள்ளனர்.
இச்சாதனை எண்ணிக்கை என்பதற்கும் அப்பாற்பட்டது. அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பரிணாம மாற்றம் மிகவும் குறிப்பிடும்படியான ஒரு நற்பேறாகும். மட்டுப்படுத்தப்பட்ட அனுபவம், முறைசார் ரீதியான பயிற்சியை சிறிதளவு பெற்றுள்ள மற்றும் எந்த வகையிலும் பெற்றிராத மாணவர்கள் இதில் இணைந்து கற்க ஆரம்பித்ததுடன், தன்னம்பிக்கையும், தேர்ச்சியும் பெற்ற தொழில்ரீதியானவர்களாக வளர்ச்சி கண்டுள்ளனர். தொழில்நுட்ப தகைமைகளை அவர்கள் பெற்றுள்ளது மாத்திரமன்றி, ஒழுக்கம், தொடர்பாடல், ஒருமித்த உழைப்பு, மற்றும் வலுவான சேவை மனப்பாங்கு போன்ற அத்தியாவசிய வாழ்க்கைத்திறன்களையும் அவர்கள் தமக்குள் வளர்த்துள்ளனர். மிகச் சிறந்த மாணவருக்கான விருதை பெண் பட்டதாரி ஒருவர் பெற்றுக்கொண்டமை இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வலுவூட்டல் மற்றும் மகத்துவம் ஆகியவற்றின் உத்வேகத்தைப் பிரதிபலித்துள்ளது.
திரு. சந்தன தல்வத்த, நிறைவேற்றுப் பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி, Citrus Leisure PLC; திரு. மணி சுகதபால, பணிப்பாளர் - விற்பனை, Citrus Leisure PLC; திருமதி அச்சலா சில்வா, பணிப்பாளர் - குழும மனிதவளங்கள் மற்றும் நிர்வாகம், George Steuart & Company மற்றும் திரு. திவங்க தாப்ரூ, மனித வளங்கள் குழும தலைமை அதிகாரி, Citrus Leisure PLC அடங்கலாக Citrus Leisure PLC மற்றும் George Steuart & Company ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்துள்ளனர். இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு தமது நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துள்ள அவர்கள், இம்முயற்சிக்கு ஆதரவளிப்பதில் தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குழுமத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைற்கல்லினைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், இதன் நற்பேறானது கொண்டாட்டம் என்பதற்கும் அப்பால் வியாபித்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் அடையப்பெற்றுள்ள வளர்ச்சி மற்றும் தோற்றுவித்துள்ள பரந்த சமூக மதிப்பு ஆகியவற்றால் உத்வேகமடைந்துள்ள Citrus Leisure PLC, இந்நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றது. முறையாக பயன்படுத்தப்படாத திறமைகளை புடம்போட்டு, ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுவதில் இன்னும் அதிக எண்ணிக்கையான இலங்கையர்களுக்கு வலுவூட்டி, இலங்கையின் விருந்தோம்பல் துறையின் நீண்ட கால வளர்ச்சிக்கும் ஆதரவளிப்பதில் முனைப்புடன் உள்ளது.
