May 11, 2026 - 01:20 PM -
0
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, உரத்தின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் முக்கிய அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, அந்தப் பிராந்தியத்தினூடான கப்பல் போக்குவரத்து 90 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உர உற்பத்திக்கான மூலப்பொருட்களின் உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை ஊடாகவே இடம்பெறுவதால், இந்தத் தடைகள் ஏற்கனவே உலகம் முழுவதுமுள்ள உர விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. உரத்தின் மிக முக்கியமான மூலப்பொருளான யூரியா உற்பத்தியில் ரஷ்யா, எகிப்து மற்றும் சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக ஈரான் உலகின் நான்காவது மிகப்பெரிய விநியோகஸ்தராக உள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியில் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் முதன்மையான கவனம் செலுத்துவதை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) பாராட்டியுள்ளது. அத்துடன், மேலதிக பயிர்களுக்கான உர மானியம் 18,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதை அந்தச் சங்கம் வரவேற்றுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள், உலகளாவிய தளம்பல் நிலைமைகளுக்கு மத்தியில் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கான விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இருப்பினும், மற்றுமொரு உர நெருக்கடியின் விளைவுகள் நேரடி விவசாய பாதிப்புகளுக்கு அப்பால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) எச்சரித்துள்ளது. முக்கியமாக, அடுத்த இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரையிலான காலப்பகுதி, பெருந்தோட்டத் துறையின் வருடாந்த பயிர் விளைச்சலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இச்சூழ்நிலையானது நாட்டின் செலுத்தல் நிலுவை, பணவீக்கம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய வளங்களைக் கொள்வனவு செய்யும் திறன் ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய உர நெருக்கடியானது, 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட உரத் தடையின் போது பெருந்தோட்டத் துறை எதிர்கொண்ட பாரிய அழிவுகளையும் சவால்களையும் மீள நினைவூட்டுகிறது. அந்தத் தடை நீக்கப்பட்ட பின்னரும், அதிலிருந்து மீண்டு வர நான்கு ஆண்டுகள் எடுத்தன. இந்நிலையில், உற்பத்தித் துறை முன்னேற்றம் கண்டு வந்த தருணத்தில், இந்த புதிய உரப் பிரச்சினை மீண்டும் உருவெடுத்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே பெருந்தோட்டத் துறை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), குறிப்பாக பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை குறித்தும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மாத்திரமே உர விநியோகத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), இந்தச் சவால்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காலப்பகுதி முழுவதும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில் பெருந்தோட்டத் துறை மிக முக்கியமான பங்கினை வகித்தது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமையின் போதும் நாட்டின் மக்ரோ பொருளாதார (Macroeconomic) ஸ்திரத்தன்மைக்கு இத்துறை தொடர்ந்து பங்களிப்பு செய்வது அவசியமாகும். சிறுபோக பருவ காலத்தில் நெல் விவசாயத்திற்கு மாத்திரம் சுமார் 98,800 மெட்ரிக் தொன் உரம் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது கையிருப்பிலுள்ள உரமானது மொத்த தேசியத் தேவையில் 60 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடியதாக உள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே சமீபத்திய செய்திக் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் முழுப் பெருந்தோட்டத் துறையும் வகிக்கும் முக்கியத்துவத்தை இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி வருவாய் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டுவதிலும், கிராமப்புற வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலும் இத்துறை மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது.
FAO தலைமைப் பொருளாதார நிபுணர் அலுவலகத்தினால் 2026 மார்ச் 15 அன்று வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய யூரியா ஏற்றுமதியில் சுமார் 30 முதல் 35 சதவீதத்தை வளைகுடா பிராந்தியம் கொண்டுள்ளது. எனினும், அங்கு மோதல்கள் ஆரம்பமானது முதல் இந்த விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகப்படியான உரப் பயன்பாட்டைக் கொண்டிருப்பதுடன், வளைகுடா பிராந்தியத்தின் விநியோகச் சங்கிலிகளில் கணிசமாகத் தங்கியிருக்கும் விவசாய முறைகளே (Farming systems) இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை என அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த நிலைமையானது தெற்காசியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளுக்குப் பொருந்தும். இந்தத் தடைகள் நீடித்தால், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய உரங்களின் விலைகள் சராசரியாக 15 முதல் 20 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என FAO பகுப்பாய்வு கணித்துள்ளது. இதன் விளைவாக, இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் 2027 ஆம் ஆண்டிலும் அறுவடை மற்றும் பயிர் விளைச்சலில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி இறுதி முதல் மார்ச் 30 வரையான காலப்பகுதியில், உலகச் சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் யூரியாவின் விலை 460 அமெரிக்க டொலரிலிருந்து 690 டொலராக உயர்ந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன. அதேவேளை, நாட்டின் முதன்மை விநியோகஸ்தரான சீனா, தனது உள்நாட்டுத் தேவையைப் பாதுகாப்பதற்காக ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. இந்த நெருக்கடியின் பாதிப்புகளைக் குறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் தற்போது ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், அந்த நாடுகளும் தத்தமது உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உள்நாட்டுத் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கும்.
இந்த வாரத்திற்குள் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத் தொகுதி நாட்டை வந்தடையும் என விவசாய பிரதி அமைச்சர் கௌரவ நாமால் கருணாரத்ன அறிவித்துள்ளார். இருப்பினும், இது விவசாயத் துறையின் ஒட்டுமொத்த தேவையில் மிகச் சிறிய பகுதியை மாத்திரமே பூர்த்தி செய்யும் என விவசாய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
