May 19, 2026 - 12:27 PM -
0
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த வீட்டிற்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் ஊடாக நுழைய முடியும் என்ற போதிலும், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்ததில் 2026ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கும் 2026ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநபர்கள் எவரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, இறந்துபோனவர் வசித்து வந்த வீட்டிலிருந்த சிசிடிவி உபகரணங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அந்த சிசிடிவி உபகரணங்களிலும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொலிஸார், மரணமடைந்தவர் வசித்து வந்த வீட்டிலும், மரணம் சம்பவித்த வீட்டிலும் இருந்த சிசிடிவி கெமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
அதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மரணமடைந்தவர் வசித்த வீடு மற்றும் மரணம் சம்பவித்த வீடு ஆகியவற்றின் சி.சி.டி.வி கெமரா கட்டமைப்புக்குரிய டி.வி.ஆர் இயந்திரங்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து, அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம்சமர்ப்பித்து அறிக்கை கோருவதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
மேலும் கருத்துத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து வகைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றில் அடையாளம் தெரியாத இரு வேறு வகையான மருந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதில் ஒரு வகையான மாத்திரைகள் 9ம், மற்றுமொரு வகையான மாத்திரைகள் 11ம் இருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து விபரித்த பொலிஸார், மரணமடைந்தவருக்கும் வீட்டின் பணியாளர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த தினத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்த போதிலும், போதிய கால அவகாசம் இன்மையால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், அதனால் மீண்டும் சத்தியக்கடதாசிகளைச் சமர்ப்பித்து அதற்கான உத்தரவுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீதவான் பொலிஸாரிடம், "இந்த சாட்சி விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?" என கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பொலிஸார், "அவர்களிடம் இன்னும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது" எனத் தெரிவித்தனர்.
மீண்டும் பொலிஸாரை நோக்கி நீதவான், "வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்பதற்காக சாட்சிகளை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையே முதலில் சாட்சியமளிக்க அழைக்க வேண்டும். வாக்குமூலங்களைப் பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அச்சமயம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி, "இந்த இரு பிணையாளர்களும் விளக்கமறியலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த நீதவான், "விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் அல்லவே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் இலகுவானதே. என்னிடம் இருந்து உத்தரவொன்றைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்ய முடியும்" என்று கூறினார்.
இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காகப் பல சாட்சிகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அழைத்திருந்தனர்.
அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதவான், "இன்று சாட்சியமளிப்பதற்காகப் பல பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரினதும் சாட்சியங்களை இன்று பதிவு செய்ய முடியாது. அவசியமற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். சாட்சிகளுக்குள் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது" எனக் குறிப்பிட்டதுடன், இந்த மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகள் பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

