May 22, 2026 - 01:46 PM -
0
இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.
சினிமாவும் கிரிக்கெட்டும் சேர்ந்தால், அங்கு ஒரு சுவாரஸ்யமான கிசுகிசுவுக்குப் பஞ்சம் இருக்காது. இப்போது கோலிவுட் முழுவதும் அப்படியொரு பெரிய செய்திதான் தீயாகப் பரவி வருகிறது. அது வேறு யாருமல்ல, தமிழ் சினிமாவின் 'மியூசிக் சென்சேஷன்' அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் 'ஐகான்' காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம்தான் அந்த ஹாட் டாபிக் ஆமாம், கடந்த சில நாட்களாக இவர்களின் திருமணம் உறுதியாகிவிட்டதாக இணையத்தில் செய்திகள் வட்டமடிக்கின்றன.
தற்போது வரும் தகவல்களின்படி, இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்த ஹை-ப்ரொஃபைல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சன் நெட்வொர்க் மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் வாரிசான காவ்யா மாறனுக்கும், ஒரு படத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அனிருத்துக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகவே காதல் இருப்பதாகப் பேச்சு அடிபட்டது. இவர்கள் இருவரும் லாஸ் வேகாஸில் ஒன்றாகச் சுற்றியதாகவும், அங்கு டின்னர் டேட்டிங் சென்றதாகவும் வெளியான செய்திகள் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தன.
பொதுவாக அனிருத் இதுபோன்ற செய்திகளைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார். ஆனால் சமீபத்தில் பத்திரிகையாளர்கள், "சார், கல்யாணப் பத்திரிக்கை எப்போ கொடுப்பீங்க?" என்று கேட்டபோது, அனிருத் புத்திசாலித்தனமாகச் சிரித்துக்கொண்டே, "அது வேற விஷயம்..." என்று கூறி நழுவினார். இதற்கு முன் திருமண வதந்திகள் பரவியபோது, "கொஞ்சம் ரூமர்ஸ் பரப்புவதை நிறுத்துங்க பாஸ்" என்று ட்வீட் செய்திருந்தார். ஆனால், இந்த முறை காவ்யா மாறன் பெயர் அடிபடுவதால், அனிருத் அவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றவில்லை. இதுவே ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் பல பெரிய படங்களுக்கு அனிருத்தான் இசை அமைப்பாளர். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படமாகட்டும், வரவிருக்கும் பெரிய ப்ராஜெக்ட்களாகட்டும், அனிருத்துக்கும் மாறன் குடும்பத்துக்கும் இடையே ஒரு வலுவான தொழில்முறை உறவு இருக்கிறது. இந்த தொழில்முறை உறவு, இப்போது தனிப்பட்ட உறவாக மாறப்போகிறதா என்பதுதான் அனைவரின் கேள்வியும்.
இந்தத் திருமணச் செய்திக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான ட்விஸ்ட், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அனிருத், ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அண்ணன் மகன், அதாவது ரஜினிக்கு உறவினர். மறுபுறம், கலாநிதி மாறனுக்கும் ரஜினிகாந்துக்கும் இடையே பல தசாப்த கால நட்பு உள்ளது. எனவே, இந்த இரண்டு பெரிய குடும்பங்களையும் இணைப்பதற்காக, 'தலைவரே' பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இரு வீட்டாரிடமிருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி என்றும் கூறப்படுகிறது.
காவ்யா மாறனுக்கு இப்போது 33 வயது, அனிருத்துக்கு 35 வயது. வயது மற்றும் அந்தஸ்துக்கு இந்த ஜோடி சரியான பொருத்தம் என்பது ரசிகர்களின் கருத்து. மொத்தத்தில், ஐபிஎல் மைதானத்தில் டென்ஷனாகக் காணப்படும் காவ்யாவும், மேடையில் தீப்பொறி பறக்கவிடும் அனிருத்தும் நிஜத்தில் ஒன்று சேர்வார்களா? இந்த ரகசியத்திற்கு ஆகஸ்ட் மாதம் விடை கிடைக்கலாம்.

