May 26, 2026 - 11:01 AM -
0
புகையிலை தொழிற்துறையின் தலையீடுகளை வெளிக்கொணருவோம் : புகையிலை மற்றும் நிக்கோடின் உற்பத்திகளுக்கு எதிர்ப்பினை தெரிவிப்போம் என்பதை இவ்வாண்டு சர்வதேச புகையிலை தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. இந்தத் தலைப்பின் நோக்கம், புகையிலைத் தொழிற்றுறையினர் புதிய தலைமுறையினரை, குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் நோக்கத்தில் தங்களது தயாரிப்புகளை எவ்வாறு புதுப்பித்து மீள்பொதியிடுகின்றன என்பதையும், உலகளாவிய ரீதியில் வலுவான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு பலவீனப்படுத்துகின்றன என்பதையும் வெளிப்படுத்துவதாகும். புகையிலைத் தொழில்துறை, குறைந்தளவிலான பாதிப்பு (harm reduction) என்ற கருத்தை அதிகமாக பயன்படுத்தி, இலத்திரனியல் சிகரட்டுகளை (e-cigarettes) புகைத்தலுக்கான பாதுகாப்பான மாற்றீடுகளாக விளம்பரப்படுத்தி வருகிறது.
ஆனால், இந்த வியாபார நுணுக்கங்கள் மறைமுகமாக புகையிலை மற்றும் நிக்கோடின் பயன்பாட்டை, குறிப்பாக இளைஞர்களிடையே, ஊக்குவிப்பதோடு, ஏற்கனவே நிக்கோடினிற்கு பழக்கப்படுத்தப்பட்டவர்களை தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும் காரணமாக அமைகின்றது. இலத்திரனியல் சிகரட்டுகள் நவீனமான, குறைந்த விளைவுகளுள்ள தயாரிப்புகளாக காண்பிப்பதன் மூலம், புகையிலைத் தொழில்துறை தனது வியாபாரத்தை கட்டியெழுப்பவும், தனது சந்தையை விரிவுபடுத்தவும், நிகோடின் தயாரிப்புகளின் மீதான தொடர்ச்சியான ஈர்ப்பின் மூலம் நீண்டகால இலாபத்தை அடைந்துகொள்ளவும் முயற்சிக்கிறது.
இலங்கையில் தடுக்கக்கூடிய மரணங்களும், நோய்களும் ஏற்படுவதற்கான முதன்மை காரணிகளில் ஒன்றாக புகையிலை பாவனை காணப்படுகின்றது. வருடாந்தம்; சுமார் 20,000 தடுக்கக்கூடிய மரணங்களுக்கு புகையிலை பாவனை காரணமாக இருப்பதுடன், நாட்டின் சுகாதார அமைப்பிற்கு பெரும் சுமையையும், குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. மேலும், உலகளாவிய ரீதியில் ஏற்படும் மரணங்களுக்கு தொற்றா நோய்கள் (NCDs) முக்கிய காரணமாக இருப்பதோடு, இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83% தொற்றா நோய்களாலேயே ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான பிரதான நான்கு காரணிகளில் முதன்மை காரணியாக புகையிலை பாவனை காணப்படுகின்றது. இதனால் நாட்டின் சுகாதாரம் மேலும் பாதிப்படைகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் தினமும் சுமார் 520 மில்லியன் ரூபாவை சிகரட்டுகளுக்காக செலவழிக்கின்றனர். இது தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்களை மேலும் பாதிப்படையச் செய்கின்றது. உணவு, கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியுள்ள குடும்பங்களை மேலும் வறுமைக்கு இட்டுச்செல்வதற்கு புகைத்தல் பாவனை காரணமாக அமைகின்றது. மேலும், 2019 ஆம் ஆண்டில் சிகரட் வரியிலிருந்து அரசாங்கம் பெற்ற வருமானம் 92.9 பில்லியன் ரூபாவாக இருந்த நிலையில், புகைத்தல் பாவனையால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதாரச் செலவுகள் 214 பில்லியன் ரூபாவாக காணப்பட்டன. இதனால், சிகரட் வரிவருமானத்தை விட அதன் சமூக மற்றும் பொருளாதாரச் செலவுகள் மிகவும் அதிகமானவை என்பது தெளிவாகிறது.
(Source: The Case for Investing in WHO FCTC Implementation in Sri Lanka - 2019)
இந்தக் கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார விளைவுகள், இலங்கையில் வலுவான மற்றும் தொடர்ச்சியான புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்பதுபோல், வரி மற்றும் விலை உயர்வு புகையிலை பாவனையால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைக்கும் திறன் வாய்ந்த நடவடிக்கையாகும். இது புகையிலைப் பொருட்களின் கொள்வனவு திறனை குறைத்து, புகையிலைப் பாவனையை குறைப்பதற்கு வழிவகுக்கும். Framework Convention on Tobacco Control (FCTC) உடன்படிக்கையின் 6வது கட்டுரை, புகையிலை பாவனையை குறைக்கும் பயனுள்ள வழிமுறைகளாக வரி மற்றும் விலை உயர்வை வலியுறுத்துகிறது. சமீபத்திய ஆதாரங்கள் புகையிலை வரிவிதிப்பின் நன்மைகளை மேலும் வெளிப்படுத்துகின்றன.
2023 ஆம் ஆண்டில் சிகரட் வரி 20% உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சிகரட் விற்பனை 521.5 மில்லியன் சிகரட் துண்டுகளால்; குறைந்தது. இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18% குறைவாகும். அதே நேரத்தில், அரசாங்கத்தின் வருமானம் 7.7 பில்லியன் ரூபாவால் அதிகரித்தது. (Source : மத்திய வங்கி தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்கள்) எனினும், 2024/2025 காலப்பகுதியில் பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க விலை மற்றும் வரி உயர்வுகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டில் சிகரட் வரி உயர்வின் மந்தமான போக்கு, அந்த ஆண்டில் சிகரட் உற்பத்தி 5% அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருந்த சிகரட் உற்பத்தியின் வீழ்ச்சி நிலைமை சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், தனி சிகரட் விற்பனையைத் தடைசெய்தல் மற்றும் வெற்றுப் பொதியிடலை (Plain Packaging) அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட NATA சட்ட திருத்தங்கள் சுமார் 08 ஆண்டுகளாக தாமதமடைந்துள்ளன. அதேபோல், 2025 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) முன்வைத்த புகையிலை இல்லா தலைமுறை (Tobacco Free Generation : TFG) கொள்கை முன்மொழிவு, சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும்; அமைச்சரவை அங்கீகார நிலைக்கு இன்னும் முன்னேறவில்லை. அதிகாரப்பூர்வமற்ற அழுத்தங்கள், மூன்றாம் தரப்பு ஆதரவாளர்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மூலம் புகையிலைத் தொழில்துறையினர் முக்கிய கொள்கை மாற்றங்களை பலவீனப்படுத்தவும், தாமதப்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இலங்கையில் புகையிலை இல்லா தலைமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கான இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) முன்மொழிவை ADIC வலுவாக ஆதரிக்கிறது. 2025 மே மாதத்தில், புகையிலை, மதுசாரம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்கள் குறித்த SLMA நிபுணர் குழு, 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்களுக்கான புகையிலை இல்லா தலைமுறை அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்தது. மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒழுக்கப்பூர்வ பொறுப்பு ஆகிய அடிப்படைகளில் அமைந்துள்ள இந்த முன்னேற்றமான கொள்கை, எதிர்கால தலைமுறைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடைசெய்து, படிப்படியாக புகையிலைப் பாவனையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தடுக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதோடு, நாட்டின் நீண்டகால சுகாதார, சமூக மற்றும் பொருளாதார நன்மைகளையும் உறுதிசெய்யும் பொதுச் சுகாதார நடவடிக்கையாக இந்தக் கொள்கை அமைகிறது.
எனவே, இலங்கையில் வலுவான மற்றும் முன்னேற்றமான பொதுச் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை ADIC வலியுறுத்துகிறது. எதிர்கால தலைமுறைகளை புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும், தொழில்துறை தலையீடுகளிலிருந்தும் பாதுகாக்கவும், அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்யவும் பின்வரும் பரிந்துரைகளை விரைந்து செயற்படுத்துமாறு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கோருகிறது.
- பணவீக்கம் மற்றும் வருமான உயர்வுகளுக்கு ஏற்ப புகையிலை வரிகளை அதிகரித்தல்.
- ஒரே மாதிரியான புகையிலை வரி (ஒற்றை வரி) அமைப்பை அறிமுகப்படுத்துதல்.
- NATA சட்ட திருத்தங்களை (தனி சிகரெட் விற்பனைத் தடை மற்றும் வெற்றுப் பொதியிடல் அறிமுகம்) செயல்படுத்துதல்.
- புகையிலை இல்லா தலைமுறை கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.
- புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளின் கீழ் எந்த வடிவிலும் குறைந்தளவிலான பாதிப்பு (Harm Reduction) என்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாது நிராகரித்தல். ஏனெனில், இத்தகைய அணுகுமுறைகள் நிகோடின் பயன்பாட்டை சாதாரணமாக்குவதற்கும், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் தடுப்பு செயற்பாடுகள் மற்றும் பொதுச் சுகாதார நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கும் காரணியாக அமைகின்றது.
- புகையிலைத் தொழில்துறை தலையீடுகளுக்கு எதிரான சட்ட அமுலாக்கத்தையும், சமூக நடவடிக்கைகளையும் வலுப்படுத்துதல்.
2026ஆம் ஆண்டு சர்வதேச புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளை புகையிலை பாவனையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்காக கொள்கை நிர்ணயிப்போர், சுகாதார நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து வலுவாக செயற்பட வேண்டும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC) கேட்டுக்கொள்கின்றது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC)

