May 26, 2026 - 05:38 PM -
0
SLT குழுமம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் இரட்டை இலக்க வருமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது பெருமளவு உயர்ந்த தொகையாகும். இதில் தொழிற்படு இலாபம் மற்றும் தேறிய வருமதிகள் போன்றவற்றில் பதிவாகியிருந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் புரோட்பான்ட் (இணைய) சேவைகளுக்கு தொடர்ச்சியாக நிலவிய கேள்வி போன்றன அதிகம் பங்களிப்புச் செய்திருந்தன. குழுமத்தின் பெறுபேறுகளினூடாக, நிதி நிலைமைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் மற்றும் வருடத்தின் ஏனைய காலப்பகுதிக்கு குறிப்பிடத்தக்களவு உந்துசக்தி போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது, SLT-MOBITEL இன் சகல குழும நிறுவனங்களும் பரந்தளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், SLT குழுமத்தின் இதுவரையில் பதிவாகியிருந்த சிறந்த காலாண்டு நிதிப் பெறுபேற்றை எய்த முடிந்திருந்ததாக தெரிவித்துள்ளது. பெறுபேறுகளினூடாக உறுதியான நிறைவேற்றம், தொழிற்பாட்டு சிறப்பு மற்றும் தொடர்ச்சியான வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றுடன், ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான தீர்க்கமான ஆரம்பமும், ஊக்குவிப்புயும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் நிறுவுதலில் தாமதங்கள் குறித்த தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், தனது 5G வலையமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதைய பேரினப் பொருளாதார சவால்களை சமாளித்துக்கொண்டே, உகந்த செயல்பாட்டை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக, இம் முடிவுகள் வலுவான செயலாக்கம், செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் நீடித்த வாடிக்கையாளர் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. இது ஒரு தெளிவான திருப்புமுனையைக் குறிப்பதோடு, வரும் ஆண்டிலும் இவ் வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் SLT குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா, SLT-MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், பிரதம செயற்பாட்டு அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் பிரதம நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன் போது, பிரதம நிதி அதிகாரி குழுமத்தின் முதல் காலாண்டு சிறந்த வினைத்திறனை பற்றிய விளக்கங்களை வழங்கியதுடன், மூலோபாய முதலீடுகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினூடாக இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பை முன்னெடுத்தல் தொடர்பில் நிறுவனத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நிதிசார் பெறுபேறுகளில் குறிப்பிடப்பட்டிருந்ததன் பிரகாரம், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குழுமம் உறுதியான தொடக்கத்தை பதிவு செய்திருந்ததுடன், அதன் திரண்ட வருமானம் ரூ. 30.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2025 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 27.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.6% வளர்ச்சியாகும். நிகர இலாபம் ரூ. 14.6 பில்லியனாக உயர்ந்திருந்தது.
அதிகளவு புரோட்பான்ட் கேள்விகளின் பங்களிப்புடன் இது 14.1% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. தொழிற்படு இலாபம் ரூ. 5.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 3.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக 39.1% முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 4.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 2.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 55.4% உயர்வாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 3.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டில் ரூ. 2 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், இது 53.3% வளர்ச்சியாகும்.
நிறுவனமட்டத்தில், SLT PLC உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வருமானம் ரூ. 19.7 பில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ.17.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.6% உயர்வாகும். தேசிய இலாபம் ரூ. 9.9 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.4% உயர்வாகும். தொழிற்படு இலாபம் ரூ. 3.5 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 2025 முதல் காலாண்டில் ரூ. 2.5 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், 36% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 2.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 51% வளர்ச்சியாகும். காலாண்டுக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 2.1 பில்லியனாகும். கடந்த ஆண்டின் ரூ. 1.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 53.3% அதிகரிப்பாகும்.
மொபிடெல் 9.9% வருமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 1.2 பில்லியன் வளர்ச்சியாகும். குரல்வழி மற்றும் சர்வதேச அழைப்பு முடித்தல் மூலமான வருமானங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும், புரோட்பான்ட் வருமானத்தில் ஏற்பட்ட 28% வளர்ச்சியும், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், தீர்வு வருமானங்கள் மற்றும் ரோமிங் ஆகியவற்றில் ஈட்டப்பட்ட இலாபங்களும் இந்த வளர்ச்சிக்குக் கைகொடுத்தன.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்புப் பயணத்தில் முக்கிய மேம்படுத்தலாக, தனது 5G வலையமைப்பை பொது மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, இலங்கையர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்பு வசதிகளையும், ஆற்றலையும் அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அபார வேகம் மற்றும் அதிகுறைந்த தடங்கல்கள் என்பதற்கு அப்பால் SLT-MOBITEL 5G இன் வலிமையால், இலங்கையர்கள் எவ்வாறு பணியாற்றுவது, பயில்வது மற்றும் தமது வாழ்க்கைமுறையை முன்னெடுப்பது எனும் சூழலை மாற்றியமைக்கும். கல்வி, சுகாதார பராமரிப்பு, உற்பத்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரதான துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மையை தொழில்னுட்பம் கொண்டுள்ளது. டிஜிட்டல் உள்ளடக்கத்தை துரிதப்படுத்துவது மற்றும் நிறுவனங்களுக்கு வலுவூட்டுவதனூடாக SLT- MOBITEL 5G இனால், எதிர்காலத்துக்கு தயாராக இருப்பது, அறிவினால் இயக்கப்படும் பொருளாதாரம் போன்றவற்றுக்கு அடித்தளம் இடப்பட்டு, சர்வதேச டிஜிட்டல் தளத்தில் இலங்கையை போட்டியிடக்கூடிய நிலைக்கு உயர்த்தும்.
நவீன உட்கட்டமைப்புகள், உயர் கொள்ளளவுடைய ஃபைபர் தடங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட வயர்லெஸ் வலையமைப்புகள் போன்றன இலங்கையில் 5G ஐ பரந்தளவில் பெற்றுக் கொடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் நாட்டின் டிஜிட்டல் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிப்பதுடன், தொழிற்துறைகள், வியாபாரங்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இன்று இலங்கை முழுவதும் 5Gஐ பொதுமக்கள் அணுகக்கூடியதாக மாற்றி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள SLT-MOBITEL, 5Gஇன் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் மூலம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இது பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பிரஜைகள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்க உதவுகிறது.

