May 29, 2026 - 10:40 AM
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
By மட்டக்களப்பு நிருபர் சரவணன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் - 05, நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சிறுமி தனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவ தினமான நேற்று மாலை 5.30 மணியளவில், சிறுமியும் அவரது சகோதரனும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.
வெளியில் சென்றிருந்த தந்தை வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, குளியலறையிலிருந்த சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஏறாவூர் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

































