Jun 1, 2026 - 11:30 AM -
0
* குழுமத்தின் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.6% இனால் உயர்வு, இதில் இணைய சேவைகளின் வளர்ச்சி அதிகம் பங்களிப்புச் செய்திருந்தன
* குழுமத்தின் தொழிற்படு இலாபம் 39.1% இனாலும், வரிக்கு முந்திய இலாபம் 55.4% இனாலும், தேறிய இலாபம் 53.3% இனாலும் உயர்வு
* SLT PLC இன் வருமானம் 10.6% இனால் அதிகரித்து ரூ. 19.7 பில்லியனாக உயர்வு, தொழிற்படு இலாபம் 36% இனாலும், தேறிய இலாபம் 53.3% இனாலும் உயர்வு
* மொபிடெல் வருமானம் 9.9% இனாலும், தொழிற்படு இலாபம் 54.7% இனாலும், தேறிய இலாபம் 63.7% இனாலும் உயர்வு
SLT குழுமம் 2026 ஆம் ஆண்டை சிறந்த நிதிப் பெறுபேறுகளுடன் தொடங்கியுள்ளது. SLT குழுமம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் இரட்டை இலக்க சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது பெருமளவு உயர்ந்த தொகையாகும். இதில் தொழிற்படு இலாபம் மற்றும் தேறிய இலாபம் போன்றவற்றில் பதிவாகியிருந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் புரோட்பான்ட் (இணைய) சேவைகளுக்கு தொடர்ச்சியாக நிலவிய கேள்வி போன்றன அதிகம் பங்களிப்புச் செய்திருந்தன. குழுமத்தின் இப்பெறுபேறுகளினூடாக, நிதி நிலைமைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் மற்றும் இவ்வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு குறிப்பிடத்தக்களவு உந்துசக்தி போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குழுமத்தின் செயற்திறன்
2026 ஆம் ஆண்டில் குழுமம் உறுதியான ஆரம்பத்தை பதிவு செய்திருந்தது. குழும மொத்த வருமானம் ரூ. 30.8 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2025 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 27.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 10.6% வளர்ச்சியாகும். நிகர இலாபம் ரூ. 14.6 பில்லியனாக உயர்ந்திருந்தது. அதிகளவு புரோட்பான்ட் கேள்விகளின் பங்களிப்புடன் இது 14.1% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
தொழிற்படு இலாபம் ரூ. 5.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 3.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. அதனூடாக 39.1% முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 4.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 2.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 55.4% உயர்வாகும். வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 3.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டில் ரூ. 2 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், இது 53.3% வளர்ச்சியாகும்.
நேரடிச் செலவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6% இனால் உயர்ந்திருந்தது. இதில் அதிகரித்த மின்சார கட்டணங்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் நாணயமாற்றுப் பெறுமதி அழுத்தங்கள் போன்றன அதிகம் பங்களிப்புச் செய்திருந்தன. முடிவடைந்த முதல் காலாண்டில் குழுமத்தின் நிதிச் செலவுகள் குறைவடைந்துள்ளன. மேலும், வெளிநாட்டு நாணய மாற்றங்களின் காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான இழப்புகளுடன் ஒப்பிடுகையில், இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது குழுமத்தின் இலாபத்திறனை மேலும் அதிகரிக்க உதவியது. அதேவேளை, இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததன் காரணமாக வருமானவரி செலவுகளும் 61.3% ஆக உயர்ந்துள்ளன.
SLT குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “முதல் காலாண்டில் நாம் பதிவு செய்திருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளினூடாக SLT குழுமத்தின் மீண்டெழும் திறன் மற்றும் எமது மூலோபாயத்தின் வெற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை இலக்க வருமான வளர்ச்சியையும், உயர் இலாபகரத் தன்மையையும் வெளிப்படுத்தி, தீர்க்கமான திருப்பத்தையும், ஆண்டு முழுவதற்குமான உந்து சக்தியையும் வெளிப்படுத்தியுள்ளோம். இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், புத்தாக்கத்தை முன்னெடுப்பது, இணைப்புத்திறனை வலிமைப்படுத்துவது மற்றும் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும், நாட்டுக்கும் நிலைபேறான பெறுமதியை வழங்குவது போன்றவற்றில் குழுமம் தன்னை அர்ப்பணித்துள்ளது.” என்றார்
SLT PLC உறுதியான வளர்ச்சியை வெளிப்படுத்தியது
நிறுவனமட்டத்தில், SLT PLC உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வருமானம் ரூ. 19.7 பில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ.17.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.6% உயர்வாகும். மொத்த இலாபம் ரூ. 9.9 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.4% உயர்வாகும்.
தொழிற்படு இலாபம் ரூ. 3.5 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 2025 முதல் காலாண்டில் ரூ. 2.5 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், 36% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 2.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 51% வளர்ச்சியாகும். காலாண்டுக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 2.1 பில்லியனாகும். கடந்த ஆண்டின் ரூ. 1.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 53.3% அதிகரிப்பாகும். நேரடி செலவுகள் 7.9% இனால் உயர்ந்திருந்ததுடன், இதில் எரிபொருள் செலவு மற்றும் வரிக் கட்டணங்களால் (Tariff) ஏற்பட்ட அழுத்தம் என்பன பங்களிப்புச் செய்திருந்தன. எவ்வாறாயினும் வருமான வளர்ச்சி மற்றும் வினைத்திறன் மேம்பாடு போன்றன இந்த அழுத்தங்களையும் கடந்து உயர்வை பதிவு செய்ய ஈடு செய்தன.
இந்த வினைத்திறனினூடாக, வருமான வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், செலவு கட்டுப்பாட்டினை பேணுவதிலும் SLT PLC இன் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டதுடன், மேலும் இதன் விளைவாக உறுதியான இலாபகரத்தன்மையும் வருவாய் ஈட்டுதலும் மேலும் வலுப்பெற்றுள்ளன.
SLT-MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் கருத்துத் தெரிவிக்கையில், “இக்காலாண்டின் பெறுபேறுகள், SLT-MOBITEL தொடர்ச்சியான வளர்ச்சியை வழங்கவும், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்தவும், அத்துடன் AI மற்றும் 5G புத்தாக்கங்களின் அடுத்த கட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தயார் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. தேசத்தின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பப் பங்காளர் எனும் தனது வகிபாகத்தை இது மேலும் பலப்படுத்துகின்றது. மேலும், மொபிடெல் நிறுவனத்தின் நிலையான வாடிக்கையாளர் வளர்ச்சியும், அதிகரித்து வரும் புரோட்பான்ட் கேள்வியும் எமது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான செயல்திட்டம் ஆகியவற்றின் வினைத்திறனை வெளிப்படுத்துகின்றது. வருமான அதிகரிப்பு மற்றும் புரோட்பான்ட் வளர்ச்சியுடன், தரவு-மையப்படுத்தப்பட்ட எதிர்காலத்தின் வாய்ப்புகளை நாம் சுவீகரித்துக் கொள்வதுடன், செலவு கட்டுப்பாடு மற்றும் வினைத்திறனையும் பேணி வருகின்றோம்.” என்றார்.
மொபிடெல் உறுதியான செயற்திறனை வெளிப்படுத்தியது
2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மொபிடெல் 9.9% வருமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 1.2 பில்லியன் வளர்ச்சியாகும். Voice (குரல்வழி சேவை) மற்றும் சர்வதேச அழைப்பு நிறைவு சேவை (International Termination) மூலமான வருமானங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும், புரோட்பான்ட் வருமானத்தில் ஏற்பட்ட 28% வளர்ச்சியும், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், தீர்வு வருமானங்கள் மற்றும் ரோமிங் ஆகியவற்றில் ஈட்டப்பட்ட இலாபங்களும் இந்த வளர்ச்சிக்குக் கைகொடுத்தன.
கடந்த ஆண்டில் காணப்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, இக்காலாண்டிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சாதகமான போக்கினை வெளிப்படுத்தியுள்ளது. இது மொபிடெல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர் உள்வாங்கலிலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தந்திரோபாயங்களிலும் கிடைத்துள்ள வெற்றியினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

