Jun 2, 2026 - 04:53 PM -
0
புதிதாக மெருகேற்றப்பட்டு மீளத்திறந்து வைக்கப்பட்ட கொழும்பு பேருந்து நிலையத்துக்கு SLT- MOBITEL நவீன டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வலுவூட்டியுள்ளது தொழில்நுட்பம் தெளிவான தேசிய நோக்கத்திற்காகப் பயன்பட வேண்டும் என்ற தனது நம்பிக்கையை SLT-MOBITEL எவ்வாறு நடைமுறையில் சாத்தியமாக்குகிறது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. தேசிய தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குநர் என்ற வகையில், கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் அண்மைய நவீனமயமாக்கல் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு SLT-MOBITEL தனது பங்களிப்பை வழங்கியிருந்தது.
இம்முன்னெடுப்பு வெறும் பயணச்சீட்டுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு அப்பால் சென்று, தூர இடங்களுக்கான பேருந்து பயணங்களின் போது பயணிகளுக்கு அதிகளவிலான வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் முன்கூட்டியே திட்டமிடக்கூடிய தன்மை ஆகியவற்றை வழங்கும் வகையில், அவர்களின் தினசரி பயண அனுபவத்தை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட போக்குவரத்துப் பயணத்திற்கு ஆதரவளிப்பதிலும், பிரஜைகளை மையமாகக் கொண்ட பொதுச் சேவைகளை மேம்படுத்துவதிலும் SLT-MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை இம்முன்னெடுப்பு மேலும் வலியுறுத்திக் காட்டியுள்ளது.
புனரமைக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கலில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த மாபெரும் மாற்றத்தின் மையமாக SLT-MOBITEL விளங்குவதுடன், பயணிகளின் வசதி, செயல்பாட்டுத் திறன் மற்றும் தேசிய அளவிலான இணைப்புத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நிறுவனத்தின் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் இந்த நிலையக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பொதுச் சேவை விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்குடன், பாதுகாப்பான, விரிவாக்கக்கூடிய மற்றும் பிரஜைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்குவதில் SLT-MOBITEL தன்னை ஈடுபடுத்தியுள்ளது.
பேருந்துகள் வருகை தரும் மற்றும் புறப்படும் நேர அட்டவணைகளையும், பொது அறிவித்தல்களையும் உடனுக்குடன் நேரலையாகக் காண்பிக்கும் டிஜிட்டல் காட்சித் திரைத் தீர்வு உள்ளடங்கலாக, தகவல் தொடர்பு மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்புச் சேவைகளை SLT- MOBITEL வழங்கியிருந்தது. அத்துடன், பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக wi-fi வசதி, பயணிகள் தங்கியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்குமான இணைய இணைப்பை உறுதிசெய்துள்ளது. இந்த டிஜிட்டல் அணுகல் வசதிகள், தினசரி பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மிகவும் சுமுகமான பயண அனுபவத்தையும், நம்பகமான தகவல்களையும் வழங்குவதுடன், பொதுப் போக்குவரத்து மீதான அவர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும்
இவ்விழாவின் போது மாகும்புர-மாத்தறை மற்றும் மாகும்புர-காலி ஆகிய போக்குவரத்துப் பாதைகளை உள்ளடக்கிய, மாகும்பூர முன்னோடித் திட்டம் என்று அழைக்கப்படும் இணையவழி பேருந்து பயணச்சீட்டு முன்பதிவுத் தளமும் அங்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பயணிகளின் வசதிக்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும் இத்தளமானது, இருக்கை வசதிகளைச் சரிபார்த்தல், இருக்கைகளைத் தெரிவுசெய்தல் மற்றும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்த்தல் போன்ற மேம்பட்ட வசதிகளின் ஊடாக பயணிகளுக்கு இலகுத்தன்மை, கண்ணியம் மற்றும் முன்கூட்டியே திட்டமிடக்கூடிய தன்மை ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.
அதேவேளை, பேருந்து உரிமையாளர்களுக்கும் ஒழுங்குபடுத்தல் அதிகாரிகளுக்கும் இது வெளிப்படைத்தன்மை, செயல்பாட்டுத் தெளிவு மற்றும் பேருந்து நேர அட்டவணைகள் மற்றும் புறப்பாடுகளில் மேம்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.
இத்திட்டத்தின் அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து, இத்தொழில்நுட்பக் கட்டமைப்பை மேலும் செழுமைப்படுத்தவும், புதிய போக்குவரத்துப் பாதைகளுக்கு இதனை விரிவுபடுத்தவும், நாடு தழுவிய ரீதியில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் பயணிகள், பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்து நிலையப் பணியாளர்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்கும் பணிகளை முன்னெடுக்க SLT-MOBITEL திட்டமிட்டுள்ளது.
இத்திட்டமானது பாதுகாப்பு, விரிவாக்கத்திறன் மற்றும் வலுவூட்டப்பட்ட பொதுச் சேவை விநியோகம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவமளித்து, தேவைக்கேற்ப மாற்றமடையக்கூடிய மற்றும் பரிணமிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்வினை மிகக் குறுகிய காலக்கெடுவிற்குள் வழங்கிடுவதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள், பேருந்து உரிமையாளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) ஆகியவற்றுடன் SLT-MOBITEL இன் சொந்தக் குழுவினரும் இணைந்து மிகவும் நெருக்கமான கைகோர்ப்பினூடாக இப்பணியை முன்னெடுத்திருந்தனர்.
பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு நம்பகமான, இலகுவாக அணுகக்கூடிய மற்றும் பிரஜைகளை மையமாகக் கொண்ட பயண அனுபவங்களை வழங்கும் நோக்குடன், தூர இடங்களுக்கான பேருந்து இருக்கைகளை பயணிகள் இப்போது www.busticket.gov.lk என்ற இணையத்தளம், கொட்டாவ - மாகும்புர பன்முறைமை போக்குவரத்து மத்திய நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள self-service kiosks அல்லது 011 200 1266 என்ற பிரத்தியேக அவசர அழைப்பு இலக்கம் ஆகியவற்றின் ஊடாக மிகவும் இலகுவாக முன்பதிவு செய்ய முடியும். இது வசதியான, முன்கூட்டியே திட்டமிடக்கூடிய மற்றும் பயணிகளுக்கு உகந்த சுமுகமான பயணங்களை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளது.

