Jun 3, 2026 - 01:32 PM -
0
இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை மேலதிக வரியை விதிப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத மேலதிக வரியை விதிக்க பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்தல் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆடை மற்றும் துணி இறக்குமதிகளுக்குக் குறைந்த வரி விகிதங்களின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவை அமெரிக்க சந்தைக்குள் அனுமதிக்கும் சிறப்பு பொறிமுறை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த பிரேரணைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை 6ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், ஜூலை 7ஆம் திகதி அது தொடர்பான பொது விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

