Jun 4, 2026 - 08:24 PM -
0
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில் இன்று (4) இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஒரு கப்பலை நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படைக் குழுவானது இதுவரை மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், பனாமா கால்வாயினூடாக இலங்கைக் கடற்படை மேற்கொண்ட முதலாவது பயணமாகவும் இது அமைந்திருந்தது.
மேரிலாந்தின் பல்டிமோரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 12,000 கடல் மைல் தூரம் கொண்ட பயணத்தைத் தொடர்ந்து இலங்கையை வந்தடைந்த, எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய கப்பல், படைத்துறைப் பணியில் உத்தியோகப்பூர்வமாக இணைத்துக் கொள்வதற்காக கொழும்புத் துறைமுகத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன், அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் உம் இணைந்து கொண்டார்.
இக்கப்பலின் வருகையும் அது படைத்துறைப் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதும், கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், முக்கிய வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதற்காகவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உதவி செய்வதற்காகவும் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் நீடித்த பங்காண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துய்யகொந்தா, இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும் பாதுகாப்பு இராஜதந்திர அலுவலருமான லெஃப்டினன்ட் கேணல் மத்திவ் ஹவ்ஸ் ஆகியோருடன் ஏனைய அதிதிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
Decisive என அறியப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய, அமெரிக்காவின் Excess Defense Articles Program எனும் நிகழ்சித்திட்டத்தினூடாக இலங்கை கடற்படைக்கு மாற்றப்பட்ட நான்காவது முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலாகும்.
Decisive கப்பலானது, மேரிலாந்தில் உள்ள பல்டிமோரில் அமைந்துள்ள அமெரிக்க கடலோர காவற்படைக்குரிய கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டதுடன், இலங்கைக்கு மாற்றுவதற்கு அதைத் தயார் செய்யும் முகமாக அங்கு முழுமையாகப் பழுதுபார்க்கப்பட்டது.
தனது கடற் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுதல், சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் கடல்வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை முறியடித்தல், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மனிதாபிமான அவசரநிலைகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், மற்றும் உலகின் மிக முக்கியமான கடல்வழி சந்திப்புகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்கு உதவி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை இக்கப்பல் மேம்படுத்தும்.
எஸ்எல்என்எஸ் சமுத்ரவிஜய தனது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தினை இன்று ஆரம்பிக்கிறது என தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஹொவெல் கூறினார்.
ஒரு முன்னாள் அமெரிக்க போர்க் கப்பலாக, பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம் மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் அமெரிக்க மக்களுக்குச் சிறந்த முறையில் அது சேவையாற்றியது.
அக்கப்பலை இலங்கைக் கடற்படைக்கு மாற்றியமையானது, எமது இரு நாடுகளையும் இணைக்கும் நம்பிக்கையினையும், பங்காண்மையினையும் பிரதிபலிக்கிறது.
இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மையத்தில் ஒரு முக்கியமான பங்கினை ஆற்றிவரும் நிலையில், இக்கப்பலானது, சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பு மற்றும் எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் ஒரு நீடித்த சின்னமாகத் திகழட்டும்.
வரவிருக்கும் வருடங்களில் இக்கப்பல் இலங்கை மக்களுக்கு கௌரவத்துடனும் சிறப்புடனும் சேவையாற்றட்டும். என அவர் மேலும் கூறினார்.

