Jun 4, 2026 - 09:22 PM -
0
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.
"அத தெரண" மேற்கொண்ட தேடலின் போதே, அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லம், சமூக ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். அங்கு தங்கியுள்ளவர்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட வீடியோக்களே இதற்குக் காரணமாகும்.
குறித்த இடத்தில் நேற்று மாலை 5.10 அளவிலேயே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாகச் செயற்பட்ட பிரதேசமக்களும், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
தீ ஏற்படும் போது, அந்த மையத்திற்குள் வெவ்வேறு வயதுடைய மனநல குறைபாடுகள் கொண்ட 70 பேர் இருந்துள்ளனர்.
அவர்களில் 52 பேரை அக்கம் பக்கத்தினரும் பொலிஸாரும் இணைந்து காயங்களின்றி மீட்டுள்ளனர்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 8 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தினால் குறித்த முதியோர் இல்லம் முழுமையாக சேதமடைந்த நிலையில், மீட்க முடியாமல் போன 10 பேரின் உடல்கள் தீயணைக்கப்பட்ட பின்னர் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று இரவே பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்த கொட்டஹச்சி மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விபத்தை பார்வையிட்டனர்.
அங்கிருந்து காயங்களின்றி மீட்கப்பட்டவர்களை நேற்று இரவே படகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு இன்று காலை வருகை தந்த ஹொரணை பிரதான நீதவான், அங்கு நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் அங்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, முதியோர் இல்லத்தை நடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
நீர் மோட்டார் மற்றும் அங்கிருந்த மல்டி பிளக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே தீ பரவியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு அருகில் சுமார் 80 மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் தீப்பிடித்து பரவியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையில், படகொட ஆரம்பப் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்டவர்கள், இன்று காலை இராணுவத்தின் உதவியுடன் கல்பாத பகுதியிலுள்ள மற்றொரு பராமரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தீ விபத்துக்குள்ளான தடுப்பு மையத்தில் இருந்தவர்களின் உறவினர்களும் இன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அதற்கமைய தடுப்பு மையத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த தடுப்பு மையத்தின் பணிப்பாளராகச் செயற்பட்டு அதனை நடத்தி வந்த நபரை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

