Jun 5, 2026 - 11:04 AM -
0
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கிடையே, தமிழகத்தில் ஆங்காங்கே, தனிக்கட்சி தொடங்க இருக்கும் எங்கள் மலையே, அண்ணாமலையே என்ற வாசகத்துடன் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று (04) பிறந்தநாளை கொண்டாடிய அண்ணாமலை புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இன்று (05) மதியம் 12 மணிக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என கூறியிருந்தார்.
பிறந்தநாளையொட்டி டெல்லியில் முகாமிட்டு இருந்த அண்ணாமலை, அமித்ஷா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் இராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன் இராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

