Jun 5, 2026 - 05:29 PM -
0
அரசாங்கத்தினால் ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த மானியத் தொகை 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் 502,836 பேர் இந்த மானியத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக அரசாங்கத்தினால் 10,947 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதுடன், அந்தத் தொகை ஒரே தடவையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க மேலும் வலியுறுத்தினார்.
"சந்த விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும், இந்த முழுப் பருவக் காலத்திலும் நெல் விவசாயத்திற்குத் தேவையான ஒரு மூட்டை யூரியா உரத்தை 10,200 ரூபாய்க்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இந்த முழுப் பருவக் காலத்திலும் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக இந்த விலையில் உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமையின் கீழ் விவசாய மக்கள் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, இப்பருவம் முதல் உர மானியமாக வழங்கப்படும் தொகையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதுவரை ஒரு ஹெக்டேயருக்கு 25,000 ரூபாயாகக் காணப்பட்ட மானியத் தொகையை 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, இதுவரை யால பருவ நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு 409,670 ஹெக்டேயராகப் பதிவாகியுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நிலம் தயார்படுத்தப்பட்டுள்ள 40,822 ஹெக்டேயர் பரப்பளவும் காணப்படுகிறது. எதிர்காலத்தில் சில பகுதிகளில் நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் 364,900 ஹெக்டேயருக்கான உர மானியம் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10,947 மில்லியன் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதுடன், 502,836 பயனாளிகளுக்கு இப்பணம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, வழமையை விட சுமார் 2,500 மில்லியன் ரூபாய் மேலதிகப் பணத்தை இந்த யால பருவத்தில் உர மானியத்திற்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது." என்றார்.

