Jun 5, 2026 - 08:03 PM -
0
தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, இன்று (05) பிற்பகல் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரை கொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், "மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்நாட்டின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்ட ஒரு தீர்க்கமான ஆளுமையாவார். அவருக்கு முதலில் நாம் அந்த அன்பையும் மரியாதையையும் வழங்க வேண்டும். அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமாயின், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரித்தான 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி' என்ற அனுமானம் அவருக்கும் பொருந்த வேண்டும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறியே ஆட்சிக்கு வந்தது. இது தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு சட்டம் என்பதை அவர்களும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால், வரலாற்றில்கூட இதுபோன்று தவறாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. தடுத்து காவல் உத்தரவுகளின் கீழ் வைத்திருப்பதுதான் இதன் பாரதூரமான தவறான பயன்பாடாகும். ஒரு கட்சி என்ற ரீதியில் இதற்கு எதிராக தேசிய மட்டத்திலான போராட்டத்தை முன்னெடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் இதற்கு மேல் இதனை அனுமதிக்க முடியாது." என்றார்.

